இலங்கை: வெளிநாடு செல்லத் தயாராகும் ஆசிரியர்கள் -மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

இலங்கையில், வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து வெளிநாட்டுக்கு பெருமளவிலான ஆசிரியர்கள் செல்லத் தயாராகின்ற நிலையில், மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள அரச ஊழியர்களை, பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு இதனை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்நோக்கியுள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு குறைவடைந்தமை, இந்த பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு அதிகளவிலான பணியாளர்களை அனுப்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாகவே அரச ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரச ஊழியர்களில் பெருமளவினராக இருக்கிற ஆசிரியர்களும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல தயாராகின்றனர்.  இதனால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Tamil News