மக்கள் மீது வரிச்சுமை: அரசாங்கம் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

மக்கள் மீது வரிகளை சுமத்தியும் மக்களின் நலன்புரி திட்டங்களை குறைத்துமே அரசாங்கம் மேலதிக வருமானத்தை அதிகரித்துக்கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாட்டின் நிதி செயல் நுணுக்கக் கூற்று மற்றும் நிதி ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. மக்கள் மீது வரிச்சுமையைத் திணித்தே இந்நாட்டில் முதன்மை உபரி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வரிகளை அதிகரித்து, நலன்புரி உதவிகள் மற்றும் மூலதனச் செலவினங்களைக் குறைத்ததன் மூலமே அரசாங்க வருமானம் அதிகரித்துள்ளது

இதேவேளை, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் தவணைக் கொடுப்பனவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை பாராளுமன்றத்திற்கு தெளிவான அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே இந்த அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்று அவசியமாகும்.

அத்துடன் தற்சமயம் டெங்கு நோயாளர்களின் பதிவு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 49,000 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 25,000 பாதிப்புகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆகையினால், இந்த நோய் பரவலை இப்போதே கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  என்றார்.