‘தமிழர்களுக்கு சுதந்திரமான எதிர்காலமே இல்லை’-அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு சுதந்திரமான எதிர்காலமே இல்லை

அரசியல் கைதிகளுக்கு நேர்ந்த அவல நிலையின் வேதனை காயம் முன்னே மீண்டும் தமிழர்களின் நெஞ்சில் அரச பயங்கரவாதத்தின் கால்களை வைத்திருப்பது தமிழர்களுக்கு சுதந்திரமான எதிர்காலமே இல்லை என்பதையே சுட்டி நிற்கிறது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழர்களின் அமைதியான வாழ்வுக்கான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து சமயங்கள் போற்றும் அஹிம்சையை வாழ்வாக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகியான திலீபன் நினைவாக விளக்கேற்றக்கூடாது என தடை விதித்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவர் ஏற்றிய விளக்கினை காலால் உதைத்தமை பேரினவாதம் தமிழர்களின் நெஞ்சில் சப்பாத்துக் கால்களால் உதைத்தமைக்கு ஒப்பாகும். அதுமட்டுமல்ல தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகின்ற ஈனச் செயலுமாகும். இத்தகைய அராஜக அரச பயங்கரவாதமும் தொடரக்கூடாது. தொடர அனுமதிக்க முடியாது.

அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவரை கைது செய்யாது அரசு சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு சுதந்திரமாக இருக்க அனுமதித்து இருப்பது பயங்கரவாதம். போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்களுக்கு பாதுகாப்பும், பதவி உயர்வுகளும் கொடுப்பது பயங்கரவாதமாகும். அதேபோன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதும் பயங்கரவாதமாகும்.

அதுமட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என அன்று அதற்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு செயலாளர் ஆகிய இன்றைய ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைதி வழி போராட்டம் நடாத்தி நீதிக்கு நீதி கோரிக்கை வைப்பவர்களை புலனாய்வாளர்கள் அச்சுறுத்துவதும் பயங்கரவாதமாகும்.

மேலும் இது தொடர்பில் சர்வதேசத்திடம் நீதி கேட்கையில் சர்வதேசத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு நீதி கோரிக்கையை எட்டி உதைத்துவிட்டு காணாமலாக்கப்பட்டோருக்கு மரண சான்றிதழ் கொடுப்போம் என கூறுவது சர்வதேச பயங்கரவாதமே.

அரச வளங்களை எல்லாம் அதிகாரத்தைப் பாவித்து கொள்ளையடிப்பதும், நிர்வாக சீரழிவிற்கு இடமளித்து பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, நாட்டின் பெறுமதிமிக்க காணிகளை அபிவிருத்தி என்னும் போர்வையில் அந்நிய சக்திகளுக்கு கையளிப்பதும் பயங்கரவாதமே.

இத்தகைய அரச பயங்கரவாதத்தின் சொந்தக்காரர்கள் சர்வதேசத்துக்கு முன்னால் நீலிக்கண்ணீர் வடித்து “நாட்டை காப்பாற்றுங்கள்” என கூறுவது ஏமாற்று நாடகம். “புலம்பெயர் சமூகமே பிரச்சினையை பேசித் தீர்ப்போம்” என கூவி அழைப்பது ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே. இத்தகைய பின்னணியிலேயே திலீபனுக்கு ஏற்றப்பட்ட விளக்கு காலால் உதைக்கப்பட்டது. இது புலம்பெயர் சமூகத்தையும் எட்டி உதைப்பதற்கு சமமாகும்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கு நேர்ந்த அவல நிலையின் வேதனை காயம் முன்னே மீண்டும் ஒட்டுமொத்த தமிழர்களின் நெஞ்சில் அரச பயங்கரவாதத்தின் கால்களை வைத்திருப்பது தமிழர்களுக்கு சுதந்திரமான எதிர்காலமே இல்லை என்பதையே சுட்டி நிற்கிறது.

அஹிம்சை வழி போராட்ட திலீபனுக்கு அஞ்சலி செலுத்த இடமளிக்காத அரச பயங்கரவாதிகள் அவர்களின் காவலர்களான பேரினவாத ஆட்சியாளர்கள் யுத்த அவலத்துக்கு நீதியை பெற்றுக் கொடுக்கப் போவதுமில்லை. அரசியல் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கப் போவதுமில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும், ஐக்கிய நாடுகள் சபையும் நீதி கோரி நிற்கும் ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் தமிழர்களுக்கு நடந்ததை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தீர்ப்புக்கு கொண்டு செல்ல வழிவகுக்க இடமளிக்க வேண்டும். உங்கள் பிரதிநிதி ஒருவரை தமிழர் பிரதேசத்தில் நிலைநிறுத்த வேண்டும்.அதன் மூலமே நல்லிணக்கம் ஏற்பட வழி வகுக்க முடியும்” என்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021