தமிழ் அரசியல்வாதிகள் ஒருமித்து நின்று அரசாங்கத்துக்கு எதிராக குரல்கொடுக்க தவறியுள்ளார்கள்-சட்டத்தரணி K.S. ரத்னவேல்

குரல்கொடுக்க தவறியுள்ளார்கள்

கடந்து செல்லும் ஆண்டில் இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பாக மனித உரிமைகள் சட்டத்தரணி K.S. ரத்னவேல் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய கருத்து.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவினுடைய அரசாங்கம் தனிச் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளால் தேர்தலில் வெற்றியீட்டி அமைக்கப்பட்ட அரசாங்கம். எங்களுக்கு தமிழரோ முஸ்லீமோ தேவையில்லை. தனிச் சிங்கள மக்களின் ஆதரவிலேயே அரசாங்கம் அமைத்தோம். ஆகவே அவர்களுக்கு மட்டுமே ஆதரவாக இருப்போம் என்ற ரீதியில் அவர்கள் ஆட்சிபீடம் ஏறியிருந்தார்கள் .

அத்துடன்  எந்தவொரு பிரதானமான விடயத்திலும் முக்கியமாக தமிழர்களை உள்வாங்கிக் கொள்ளாமல் தங்களுடைய அரசாங்கத்தை தொடங்கினார்கள். தற்போதைய நிலையில் சிங்கள பௌத்தர்களே  போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

ஏனென்றால் எந்தவொரு ரீதியிலும் பார்க்கப்போனால் பொருளாதார உட்கட்டமைப்பு, அரசியல், சமூக  ரீதியாகவோ இந்த அரசாங்கம் மிக பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கின்றது. அதுவும் சீனாவின் செல்வாக்கினால் எல்லா விதத்தாலும் பொருளாதாரத் துறையில் வீழ்ச்சியடைந்து இருக்கின்றது.

சீனர்களுக்கு எந்தவித கட்டுபாடற்ற அதிகாரத்தை வழங்கி, பல வேலைத்திட்டங்களில் அம்பாந்தோட்டை துறைமுகமாக இருக்கட்டும், விமான நிலையமாக இருக்கட்டும், கொழும்புத் துறைமுகமாக இருக்கட்டும் எந்தவொரு விடயத்திலும் சீன நாட்டு நிறுவனங்களுக்கு முதன்மை கொடுத்து, அவர்களின் தேவையில்லாத இந்த வேலைத்திட்டங்களுக்காக சீன  அரசாங்கத்திடம் கடன்வாங்கி அந்த கடன் பழுவினால்  இப்பொழுது அந்த பொருளாதார சுமையினால் நாட்டு மக்கள் முழுவதுமே அவலப்பட வேண்டிய நிலை வந்திருக்கின்றது.

அத்துடன் நாங்கள்  மேற்குலக நாடுகளை நாடமாட்டோம்.  முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்தினை நாடமாட்டோம்  என்ற ஒரு மமதையில் இருக்கிறார்கள். ஆனால் எந்த ரீதியிலும் தலையெடுக்க முடியாது. ஏனென்றால் இரசாயன பசளையாகட்டும், சமையல் எரிவாயு விடயத்திலும் மிக மிக தரத்திலும் குறைவான விடயங்களை வர்த்தக ரீதியில் வெளிநாடுகளிலிருந்து வாங்கி விவசாயிகளும் நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

தமிழர்களை பொறுத்தளவில் சொல்லவே தேவையில்லை. ஏனென்றால்  அவர்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் விஷேட ஆணைக்குழு நிறுவப்பட்டிருக்கின்றது. அதில் எந்தவொரு தமிழரும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதுபோலவே மக்களுக்குரிய  நிலங்களும் அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச காணிகளும் எந்தவிதசட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இது என்னவென்றால் ஒருமித்த  நிலப்பரம்பலில் வாழ்கின்ற தமிழ்மக்களை அவர்களுடைய நிலப்பரம்பலை சிதைப்பதற்காக வேண்டித்தான் இவ்வாறு நடைபெற்று கொண்டிருக்கின்றது.

அதே சமயத்தில் சமய ரீதியாகவும் தமிழர்களுடைய பாரம்பரியம் பண்டைய புராதன காலத்து ஆலயங்கள் சிதைக்கப்பட்டு, அதற்கு பௌத்த சாயம் தீட்டப்பட்டு அதாவது இது  இந்துக்களுடையது அல்ல, புராதன காலத்தில் பௌத்தர்களுடையதாக இருந்ததாக கூறி ஒரு புதிய சரித்திரங்களை அவர்கள் கட்டவிழ்த்துவிட்டு அப்பட்டமான பொய்களின் மூலமாக பௌத்தத்தின் மேன்மையை அவர்கள் நிலைநாட்டுகின்றார்கள். இது அரசாங்கத்தினதும், அரசாங்க உத்தியோகத்தர்களினதும், இராணுவம், காவல்துறை, மாகாண ஆளுநர்கள் மூலமாகவும் இந்த விடயத்தை மிக கபடத்தனமாக அரசாங்கம் கையாண்டு வருகின்றது.

இதன் மூலமாக தமிழ்மக்கள் அவர்களுடைய இருப்பையே சிதைத்துவிடக்கூடிய நிலை தோன்றியுள்ளது. ஆனால் இந்த கட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் ஒருமித்து நின்று இந்த அரசாங்கத்துக்கு எதிராக குரல்கொடுக்க தவறியுள்ளார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையை இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.

Tamil News