தமிழகம்:கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை

237 Views

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்ம சாவு தொடர்பான விவகாரத்தில் நீதி கேட்டு இன்று நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழகம் கள்ளக்குறிச்சியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சின்னசேலத்தில் உள்ள தனியார் உறைவிட பள்ளியில் 12Eம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஜூலை 13ஆம் திகதி அவர் தங்கியிருந்த விடுதி வளாகத்தில்  உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிறுவாகம் தெரிவித்திருந்தது.

ஆனால் மாணவியின் உறவினர்கள் தமது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உடலைப் பெற மறுத்து கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடு பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து  வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. இதில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரது ஆடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருப்பதாகத் தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் இரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மாணவியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன சேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளாகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் இன்று வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதில் பள்ளி, மற்றும் பள்ளி வாகனங்கள் சேதமாக்கப்பட்டு, தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வன்முறையைக் கைவிடுமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை விட்டுள்ளார்.

அத்துடன் பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இன்றில்லை என்றாலும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இனிவரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு  எச்சரித்துள்ளார்.

மேலும் குறித்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply