தமிழ் நாடு: சட்டென்று மாறிய வானிலை -சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை

தமிழ் நாட்டில் கத்தரி வெயில் முடிவுக்கு வந்த பின்னரும்  சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதனால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென வானிலை மாறியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தாலும், எதிர்பார்ப்புக்கு மாறாக  தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், சுரங்கப்பாதைகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, மழைநீரை வழிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை தொடரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்யசை ஒட்டியே இருக்கக் கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.