ஈழத்துக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறலை தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பாளர்களும் ஏற்கிறார்களா? துரைராசா இரவிகரன்

ஈழத்துக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்

ஈழத்துக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறலை தமிழ்நாடு மாநில அரசாங்கம் ஏற்கிறதா? என்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா இ.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களால் ஈழத்தமிழ் மீனவர்களின் வளங்கள் சுரண்டப்படுவது குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ஈழத்து மீனவர்களின் வளங்கள் சுரண்டப்படுவது இன அழிப்பின் தொடர்ச்சி என்றும் அவர் மேலும் தொடர்ந்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மிகப்பெரிய இன அழிப்பை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு எழ ஈழத்தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் காலச் சூழலில் ஈழத்துக் கடற்பரப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் சட்டத்துக்குப் புறம்பான எல்லை மீறலால் ஈழத் தமிழ் மீனவர்களின் வளங்கள் தொடர்ச்சியாக சுரண்டப்படுவது ஈழத்தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இது இன அழிப்பின் தொடர்ச்சியாகக் கட்டமைகிறது. இவ்வாறு அத்துமீறல் தொடர்வதை தமிழ் நாடு மாநில அரசாங்கமும் மக்கள் சார்பாளர்களும் ஏற்கிறார்களா?

இந்த அத்துமீறலைத் தடுக்க தமிழ்நாடு மாநில அரசாங்கம் மற்றும் தமிழ் நாட்டின் மக்கள் சார்பாளர்கள் உடனடியான வெளிப்படையான முனைப்பான முழுக் கவனத்தைத் திருப்பவேண்டும்.

தமிழ்நாடு மாநில அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாளர்களின் உடனடியான நேர்மையான  நடவடிக்கைகள் மூலம் ஈழத்து மீனவர்களின் வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கமுடியும் என்றும் இரண்டு பக்க மக்களுக்கிடையிலான முரண்களையும் முடிவுக்குக் கொண்டுவரமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tamil News