செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு ஆதரவளிக்க தமிழக முதல்வர் விஜய் உறுதி

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நாடுவதற்கு ஆதரவளிப்பதில் தமிழகத்துக்கு வரலாற்று ரீதியான கடமை இருப்பதாகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில், அடுத்த கட்டமாக எவ்வாறு நகர்வது என்பது குறித்துத் தமிழக அரசு துரிதமாக ஆராயும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையின் 7 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜயை அண்மையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போதே முதல்வர் இந்த முக்கிய உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் அதனை முன்னிறுத்தி நடத்தப்பட வேண்டிய சர்வ கட்சி மாநாடு குறித்து, தமிழக அரசின் கீழ் உள்ள வெளிநாட்டு விவகாரங்களை ஆராயும் குழுவுடன் ஆலோசித்து விரைவில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இரு நாட்டு எல்லைப் பகுதியிலுள்ள கடற்றொழிலாளர் விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை விரைவாகப் பூர்த்தி செய்யத் தனது நிர்வாகம் ஆவன செய்யும் என்றும் அவர் அக்குழுவிடம் தெரிவித்தார்.