இலங்கையில் தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
அண்மைக் காலமாக அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வீதி சமிக்ஞைகள், பெயர் பலகைகள் என அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்கின்றது.
அத்துடன், இலங்கையிலுள்ள சீன தூதரகத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அவ்வப்போது பதிவாகியிருந்தன.
சீனாவினால் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் பெயர் பலகை ஆகியவற்றில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப் பட்டிருந்தன.
தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்புக்களை அடுத்தே, தமிழ் மொழி மீண்டும் உள்வாங்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், தற்போது மீண்டும் அதே பிரச்சினை பேசு பொருளாக மாறியுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அநுராதபுரம் – சாலியபுர கஜபா படையணியில் கிரிக்கெட் மைதானமொன்று திறந்து வைக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ச கிரிக்கெட் மைதானம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மைதானத்தின் திறப்பு பலகையை, நேற்று திறந்து வைத்தார்.
திறப்பு பலகையில், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் காணப்படுகின்றமை, தமிழ் சமூகம் மத்தியில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “விளையாட்டரங்கமாக இருக்கலாம்! விளையாட்டாகவே இருக்கலாம்! அன்னை இலங்கையின் பேரில், முதல் பிரஜை, அரசியலமைப்பின் மொழிக் கொள்கையை பின்பற்றனும். அடுத்த மூன்று வருடங்களில் @GotabayaR செய்யப் போகும் “பிழைதிருத்தங்களில்” மொழிகொள்கையை பின்பற்றுவதும் ஒன்றாய் இருக்க பிரார்த்திக்கிறேன்” என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.