தமிழ் வேட்பளர்கள் மீது படைத்துறை அழுத்தங்கள்

தம்மை சிறீலங்கா படையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், துன்புறுத்தல்களையும் மேற்கொண்டுவருவதாக யாழ்மாவட்ட தமிழ் வேட்பாளர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளனர்.

சோதனைச் சாவடிகளில் தமது வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக 27 சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளதுடன், மக்களும், வேட்பாளர்களும் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக வன்னிமாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பின கடிதத்தில் தெரிவித்துள்ளர்.

படையினரின் இந்த நடவடிக்கைகளால் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கலந்துகொள்வது மிகவும் குறைவாக உள்ளதாகவும், இந்த வாரம் இடம்பெற்ற எனது கூட்டத்தில் 47 பேரே கலந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், வடபகுதி மக்கள் தேர்தல் தொடர்பில் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை. இது வாக்களிப்பிலும் எதிரொலிக்கலாம் என யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவுத் தலைவர் கலாநிதி எஸ். ரகுராம் தெரிவித்துள்ளார்.