ஹசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடி வைத்து தகர்த்த  தலிபான்கள்

428 Views

1629259682New Project 8 ஹசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடி வைத்து தகர்த்த  தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியானில் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடி வைத்து தலிபான்கள் தகர்த்துள்ளனர்.

கடந்த முறை ஆப்கானைக் கைப்பற்றிய போது, பாமியானில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த, நூற்றாண்டுகள் பழமையான புத்தர் சிலைகளை வெடிவைத்து தலிபான்கள் தகர்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் வாழும் இனத்வர்கள் ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத். 13ம் நூற்றாண்டில் மங்கோலிய வம்சத்தை உருவாக்கிய செங்கிஸ்கான் வழித்தோன்றல்கள் ஹசாராக்கள் என்று வரலாற்றுத் தகவல்கள் கூறப்படுகிறது.

இந்த ஹசாரா இனத்தின் தலைவராக இருந்த அப்துல் அலி மஸாரியை கடந்த 1995-ம் ஆண்டில் தலிபான்கள் தூக்கிலிட்டனர். ஆனால், அப்துல் அலியின் மிகப் பெரிய சிலை பாமியான் நகரில் மக்களால் நிறுவப்பட்டது.

இந்நிலையில் ஆப்கான் முழுவதும் தலிபான்கள் வசம் வந்துள்ளதால், ஹசாராக்கள் மீதான அடக்குமுறையை தலிபான்கள் தொடங்கி விட்டனர். அதில் முதல் கட்டமாக ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலியின் சிலையை தலிபான்கள் தகர்த்துள்ளனர்.

இதற்கிடையே ஹசாரா இனத்தவர்கள் வசிக்கும்  பல்வேறு மாவட்டங்களில் மேயர்களாக பெண்கள் பதவியில் உள்ளனர். அதில் சாஹர்ஹிந்த் மாவட்ட அளுநர் சலிமா மஸாரியை தலிபான்கள் சிறைப்படுத்தி வைத்துள்ளனர்.

ஆனால் தலிபான்கள் தரப்பில் நேற்று அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில், “இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். பெண்கள் சுகாதாரத்துறை, உள்ளிட்ட துறைகளில் பணியாற்றலாம். கல்வி கற்கலாம்” எனத் தெரிவித்திருந்த நிலையில் ஹசாரா இனத்தின் பெண் கவர்னர் ஒருவர் சிறைப்படுத்தப் பட்டுள்ளார்.

அதே நேரம் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் பணியில் தாலிபன் இயக்கம் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுவரை கத்தாரில் முகாமிட்டிருந்த தலிபான் இயக்கத் தலைவர்கள் தற்போது ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அந்நாடு தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானில் படைகளை முன்னரே திரும்பப் பெற்றது அமெரிக்க அரசின் தவறான கணக்கீடு என்று ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன.

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இவை கசப்பான நிகழ்வுகள்” என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானைத்  தலிபான்கள் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 20,000 அகதிகளை ஏற்றுக் கொள்ளப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

அத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் அனைவரும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானில் இருந்து செவ்வாய்க்கிழமை மட்டும் 1100 அமெரிக்கர்களை மீட்டிருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது

இந்நிலையில், “தலிபான்களிடம் சரணடைய மாட்டேன். அவர்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். இன்னொரு புதிய போருக்கு தயாராகவே இருக்கிறோம்” என்று ஆப்கான் முன்னாள் துணை அதிபர்  அம்ருல்லா சாலே  தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply