சமையல் எரிவாயு விவகாரம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அநுர குமார

306 Views

சமையல் எரிவாயு விவகாரம்
சமையல் எரிவாயு விவகாரம்:  சிலிண்டர்களில் இரசாயன கலவையின் அளவில் மாற்றாம் செய்யப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளதுடன், அதனாலேயே வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட சிலிண்டர்களை மீளப் பெற்றுக்கொள்ளும் போது மூடிகள் திறக்கப்படாத மற்றும் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாத சிலிண்டர்களை மாத்திரமன்றி மூடிகள் அகற்றப்பட்ட சிலிண்டர்களையும் மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கைத்தொழில், வர்த்தக அமைச்சுகள் மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 6ஆம் திகதி முதல் நாட்டில் 430 எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதனால் இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எரிவாயு சிலிண்டர்களில் இடம்பெற்ற இரசாயன கலவையின் அளவில் இடம்பெற்ற மாற்றமே சிலிண்டர்கள் தீப்பற்ற காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டடிருக்கின்றது.அதனால் பூதாகாரமாகியுள்ள சமையல் எரிவாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எரிவாயு சிலிண்டர் பிரச்சினைக்கு தீர்வாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையானது நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீள பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஆயினும் அந்த எரிவாயு சிலிண்டர் திறக்கப் படாமல் இருப்பது அவசியம் என கேட்டுக் கொண்டுள்ளது. அது எந்த வகையிலும் சாத்தியமாகாது. ஏனெனில் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ உபயோகத்திற்காக எடுத்துச் செல்பவர்கள் அதனை உடனடியாகவே பாவனைக்கு எடுத்திருப்பார்கள் என்பதை நுகர்வோர் அதிகார சபை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் திறக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்களையும் மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு சிலிண்டர்கள் பாவிக்கப்பட்டிருந்தால், அந்த சிலிண்டர்களின் பாரத்தை நிறுத்துப்பார்த்து, அதற்கான செலவை கழித்து, சிலிண்டர்களை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேவேளை, அரசாங்கம் பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளையும் மட்டுப்படுத்தலையும் அறிவித்துள்ளது ஆனால் அந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் தெளிவில்லாமல் உள்ளன. அது தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகும்.
துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பெருமளவு கொள்கலன்கள் தேங்கிக் கிடக்கின்றன. நீண்டகாலம் அவை துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதால் பொருட்கள் பழுதடையும் நிலை ஏற்படலாம். அதனால் அவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் ஏதேனும் பிரச்சனைகள் என்றால் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அமைச்சர்களின் மீது சுமத்த முயற்சிக்கின்றனர். அப்படியென்றால் மூன்றில் இரண்டு அதிகாரம், அமைச்சுப் பதவிகள் மற்றும் 20 ஆவது திருத்தம் என்பன எதற்கு என்று கேட்க வேண்டும் என்றார்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad சமையல் எரிவாயு விவகாரம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அநுர குமார

Leave a Reply