பௌத்த மயமாக்கல் என்னும் பெயரில் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து இனவழிப்பு நடவடிக்கை-வேலன் சுவாமிகள்

பௌத்த மயமாக்கல் என்னும் பெயரில் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்தும் திட்டமிட்ட இனவழிப்பு நடைபெறுகின்றது என சிவில் உரிமை செயற்பாட்டாளரும், இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரி பிரித்தானியாவில் நேற்று (14) இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இனவழிப்பிக்கு எதிராக குரல் கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் நேரடியாகவே கைதுகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மதகுருக்களோ எவராக இருந்தாலும் நீதிமன்றின் எந்தவொரு பிடியாணையும் பெறாது கைதுசெய்யப்படும் நிலமையே வடக்கு கிழக்கில் நிலவுகின்றது.

இறுதியாக பௌத்த மயமாக்கல் எனும் பெயரில் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை பிரித்தானியா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

கனடாவை பின்பற்றி பிரித்தானியாவும் தமிழர்களுக்கு எதிராக தாயகத்தில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையே என்பதை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்