சிறைச்சாலைகளின் திறனுக்கு அதிகமாக கைதிகள் எண்ணிக்கை இருப்பதாகவும், சில சிறைகளில் இந்த எண்ணிக்கை 300% – 400% ஆக உயர்ந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, அரசாங்கக் கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவுக்கு (COPA) தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறைச்சாலைகளில் 11,762 கைதிகளுக்கு மட்டுமே இடவசதி இருப்பதாகவும், ஆனால் தற்போது 26,791 பேர் சிறையில் இருப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 17,502 பேர் தடுப்புக் கைதிகள், 10,470 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள். மேலும், நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்ட 9,289 பேர் உள்ளதாகவும் அவர்களில் 3,569 பேர் போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அவர்களில் 1,309 பேர் அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் இருப்பதும் தெரியவந்துள்ளது . போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவில் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ள பல பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டன.
தற்போதுள்ள சிறைச்சாலை திணைக்களத்தை ஸ்தாபிக்கும் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சட்டத்தை தயாரிக்குமாறு கோபா கமிட்டி பரிந்துரைத்த போதிலும் பணியில் தாமதம் ஏற்படுவதற்கு குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
வெசாக் போன்ற சந்தர்ப்பங்களில் தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டாலும், குறுகிய காலத்தில் மீண்டும் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்படுவது பாரிய பிரச்சினை எனவும் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார். .
இதனால் புதிதாக 9 மையங்களில் புனர்வாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.