தேசிய மக்கள் சக்தி ஒற்றை கட்சி ஆட்சி முறையை நோக்கி நகர்கிறதா என்று சந்தேகம் : பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

இலங்கையில் ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதற்கான அரசியல் மற்றும் சட்டரீதியான பின்னணிகளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கி வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரவீந்திர ஜெயசிங்க இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்தை பிரதான அலுவலகத்தை மையமாகக் கொண்டே இந்த ஒற்றைக் கட்சி ஆட்சிமுறைக்கான கருத்தியல் நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் ஆபத்தான நிலைமை உருவாகி வருவதாகவும், இதன் தீவிரத்தை நாட்டின் மக்கள் எந்தளவுக்குப் புரிந்து கொண்டுள்ளனர் என்பது கேள்விகுறியாகவே உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மிகவும் நுணுக்கமான முறையில் ஒற்றைக் கட்சி ஆட்சியை நோக்கி காய்களை நகர்த்தி வருவதாகக் கூறிய அவர், அரசாங்க அமைச்சர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து வெளியிடும் அறிக்கைகள் இதன் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளன என்றார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களைப் பெருமையுடன் அடையாளப்படுத்தும் ஜனாதிபதி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைந்த மட்டத்தில் சித்தரிப்பதாகவும், நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் முத்திரையாக மாற்றும் நடவடிக்கைகள் பெலவத்தை அலுவலகத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் படியே நடந்து வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.