நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கம் விதித்துள்ள வரிகளுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கத்தினால் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – பொரளை கெம்பல் மைதான வளாகத்தில் இருந்து இன்று (3) நண்பகல் வேளையில் ஆரம்பமான இந்தப் பேரணி, கோட்டைப் பகுதியை நோக்கி நகர்ந்து சென்றது.
“அநியாய வரிகளை நீக்கு! வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு!” எனும் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் உள்ளிட்ட பல்வேறு வெகுஜன அமைப்புகளும் சிவில் சமூகக் கூட்டமைப்புகளும் பெருந்திரளாகப் பங்கேற்றன.
எதிர்ப்புப் பேரணி காரணமாக கொழும்பு வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பேரணி கோட்டையை நோக்கி நகர்ந்ததால் பொரளையைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.



