“மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்ற கருத்துக்கு சுரேஸ் கண்டனம்

தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சமகால அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் காணப்படுவதாக தெரிவித்த அவர், குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மீண்டும் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவது குறித்து கருத்து வெளியிட்டார்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், போதனா வைத்தியசாலையைத் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகள் மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ளதாகவும், அவற்றின் நிர்வாக அதிகாரங்கள் மாகாண சபைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னார் வைத்தியசாலையில் மாத்திரமல்லாது, நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் குறைபாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை, மருந்துத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்தால் அதன் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வைத்தியசாலை முன்னேற்றமடையும் என கருதுவது தவறான அணுகுமுறை என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

மன்னார் ஆயர், மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவது சரியான நிலைப்பாடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு கத்தோலிக்க மதகுருமார்கள் நீண்டகாலமாக போராடியுள்ளதாகவும், சிலர் தமது உயிர்களையே தியாகம் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான சமூகப் பின்னணியைக் கொண்ட மன்னார் மறைமாவட்டத்தின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஆயர், தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கிடைத்த அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் வழங்க வேண்டும் எனக் கூறுவது பொருத்தமானதல்ல என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.