இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த செல்லவிருக்கும் அதிகாரிகள், “இந்திய மீனவர்கள் இனி வரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள்” என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும் என்று வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் இன்று (5) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்தியா செல்லவிருக்கும் மீன்பிடி தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் தாங்கள் எதிர்பார்க்கும் விடயம் உள்வாங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக நீண்டகாலமாக பேசப்பட்டுவரும் நிலையில் புதிய பேச்சுவார்த்தையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
அந்த வகையில், அதிகாரிகள் மட்டத்தில் பேசுவதற்கு செல்கின்ற அந்த குழுவானது, இலங்கையில் இருக்கின்ற குறிப்பாக வடக்கிலிருக்கின்ற மீனவர்களின் பிரச்சினை எந்த அளவுக்கு புரிந்திருக்கிறது, அவர்களிடம் இது தொடர்பாக கருத்துக்கள் பெறப்பட்டதா? போன்ற கேள்வி நிலவுவதாகவும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை என்பது ஒரு தீர்வுக்கானது.
இந்தியாவின் அழுத்தத்தில் அல்லது வேறு அழுத்தத்தின் அடிப்படையில் பேசுவதாக இருந்தால், வடக்கிலிருக்கின்ற மீனவர்களுக்கு எந்தவிதமான எதிர்கால நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடிய சூழல் இல்லாமல் ஆகிவிடும் என்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.



