தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுரேன் ராகவன் எம்.பி நன்றி தெரிவிப்பு

மு.க.ஸ்டாலினுக்கு சுரேன் ராகவன் எம்.பி நன்றி

மு.க.ஸ்டாலினுக்கு சுரேன் ராகவன் எம்.பி நன்றி: தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு இலங்கையின் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன்  நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில்  ஏதிலிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களையும் சலுகைகளையும்   முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அறிவித்ததை வரவேற்றுள்ள சுரேன் ராகவன், இந்த மனிதாபிமானம் மிக்க செயற்பாட்டிற்காக  முதலமைச்சரை பாராட்டியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக  சுரேன் ராகவன் பணியாறிய வேளையில், 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆந் திகதி யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவது உத்தியோகபூர்வ விமான சேவையை ஆரம்பித்து தமிழ்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருந்தார். இதன்போது தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்து கலந்துரையாடியிருந்ததுடன் இலங்கைத் தமிழர்களுடைய நலன்களுக்கென சிறப்பு பிரிவொன்றை உருவாக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் முதலமைச்சராக பதவியேற்றபோதும்  மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அனுப்பி வைத்த கடிதத்திலும் தமிழ் நாட்டிலுள்ள இலங்கை தமிழர்கள் தொடர்பில் சிறப்பு பிரிவொன்றை அமைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.