மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் -மட்டு.நகரான்

59 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.

குறிப்பாக 30வயதுக்குட்பட்டவர்கள் இந்த தற்கொலைகளில் அதிகளவில் நாட்டம்கொள்வதை அவதானிக்கமுடிகின்றது. அதிலும் மாணவர்கள் இந்த தற்கொலையில் அதிகளவில் ஈடுபடுவதை அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அவதானிக்கமுடிகின்றது.

தமிழர்களின் தமிழ் தேசிய போராட்டத்தில் தமிழ் இளையோர்கள் தமது இனத்தின் உரிமைக்காக தற்கொடைதாரிகளாக தங்களை மாற்றிக்கொண்டு தமது இனத்திற்காக உயிர்களை தியாகம் செய்து இந்த உலகுக்கு தமது உணர்வுகளை வெளிப்படுத்திய ஒரு சமூகத்தில் இன்று உயிர்கள் எந்தவித இலக்குகளுமின்றி தற்கொலைகளாக மாற்றம்பெறுவது வேதனைக்குரிய விடயமாகவுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் மீது பல்வேறு விடயங்கள் திணிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கினைப்பொறுத்த வரையில் தமிழர் பகுதிகளில் போதைப்பொருள் பாவனை,மாபியாக்குழுக்கள் என பல்வேறு வகையான செயற்பாடுகள் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழர்களைப்பொறுத்த வரையில் தமது கலாசாரம்,மொழி என்பனவற்றினை பாதுகாப்பதற்கு தொடர்ச்சியாக போராடிவரும் இனமாகும். இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அழியாத எமது கலாசார, பண்பாடுகள் இன்று திட்டமிட்டு அழிக்கப்படும் சூழ்நிலையினை நாம் காணமுடிகின்றது.

இடம்பெறும் தற்கொலைகள் ஏதோ வழமையான விடயங்களாக கடந்துசெல்லமுடியாத சூழ்நிலையில் இன்று தமிழ் மக்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். தற்கொலைக்கான காரணங்களை அறிந்து அவற்றினை நிவர்த்திக்கும் வழிவகைகளை முன்னெடுக்காத நிலையிலேயே தமிழர்கள் இன்று நின்றுகொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்கள் மன அழுத்தங்களுக்குள்ளாகிய நிலையில் உள்ளதாகவும் அதன் காரணமாக அடிக்கடி தற்கொலைகளுக்கு செல்லும் நிலையுள்ளதாகவும் அண்மையில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்திருந்தார்.

இதனை அவர் மட்டக்களப்பில் கூறி இரண்டு வாரங்களுக்குள் மட்டக்களப்பில் உள்ள பிரபலபாடசாலையொன்றின் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுவரும் மாணவன் சம்பவ தினத்தன்று பாடசாலையில் பெற்றோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு செல்வதற்கு மறுத்திருந்த நிலையில் பெற்றோர் மாத்திரம் கலந்து கொள்ள சென்ற போது பாடசாலையின் அதிபர் மாணவனையும் அழைத்து வரும் படி கூறியதையடுத்து வீட்டுக்கு சென்று தந்தை அழைத்துச்சென்றபோது பாடசாலை வகுப்பறையில் மாணவன் வாந்தி எடுத்ததனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குறித்த மாணவன் பாடசாலைக்கு அழைத்து செல்லும் போது ஏற்கனவே நச்சு விதையருந்தியிருந்தமை காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.மட்டக்களப்பில் பல பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனைகள் நடைபெறுவதுடன் போதைப்பொருள் விற்பனை மாணவர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதுவரையில் வடக்கு மாகாணத்தில் மாணவர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட சம்பங்கள் தற்போது கிழக்கிலும் காலூன்றச்செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாணத்திலும் அதிகளவான தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்கொலைகள் மட்டுமன்றி மாணவர் மாணவிகளுக்கு மத்தியில் ஒழுக்க ரீதியான செயற்பாடுகளும் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது. இது தொடர்பில் முறையான கட்டமைப்பு சார் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகின்றது.

மாணவர்கள் மத்தியில் காணப்படும் அழுத்தததிற்கான காரணமாக பலவிதமாக காரணங்கள் கூறப்படுகின்றபோதிலும் மாணவர்களின் தற்கொலைகளை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லையென்பது கவலைக்குரிய விடயமாகவேயுள்ளது.

இந்த ஆண்டு இன்று வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இவற்றில் 21வயதுக்கு குறைந்த 08பேர் உள்ளடங்குவதுடன் அதிலும் அதிகமானவர்கள் மாணவர்களாகயிருப்பதே கவலைக்குரிய விடயமாகும். மன அழுத்தங்களினால் ஏற்பட்ட மரணங்களே இதில் அதிகளவாகவுள்ளதாக குறித்த விசாரணைக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் கூற்றுப்படி அதிகளவில் உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் மன அழுத்தங்களுக்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் இதுவரையில் அவ்வாறான மாணவர்களுக்கு  ஏன் ஆற்றுப்படுத்துகைகள் மேற்கொள்ளப்படவில்லையென்பதும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள போட்டி மனப்பான்மையே இன்று மாணவர்களுக்கான அழுத்தங்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள போட்டியானது மாணவர்கள் மத்தியில் இல்லாமல் ஆசிரியர்கள்,அதிபர்களுக்கு இடையிலான போட்டிகளாக உருவாகியுள்ளதன் காரணமாகவே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன.

இதேபோன்று வலயங்களுக்கு இடையாலான, மாவட்டங்களுக் கிடையிலான, மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளும் அதிபர்,ஆசிரியகளை அழுத்தங்களுக்கு உட்படுத்துவதன் காரணமாக அதன் சுமைகள் மாணவர்கள் மீது சுமதப்படுகின்றன.

இலங்கையின் கல்வி முறையில் உள்ள பிழையான முறைகள் தமிழ் சமூகத்தினை இன்று பெரும் பின்னடைவுக்குள் கொண்டுசெல்வதுடன் இந்த நாட்டில் கல்வி சமூகத்தில் எதிர்பார்ப்புகளை இல்லாமல் செய்யும் நிலைமையும் காணப்படுகின்றது.

ஒரு சமூகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சியடையும்போதே அந்த சமூகத்தின் இருப்பு பாதுகாக்கப்படும். அந்த வளர்ச்சியானது ஆரோக்கியமான வளர்ச்சியாகயிருக்ம்போதே அந்த சமூகம் ஆரோக்கியமான சமூகமாகயிருக்கும். ஆனால் இவ்வாறான அழுத்தங்களினாலும் அடக்குமுறைகளினாலும் கல்விபெற்றுவரும் சமூகத்தின் மத்தியிலிருந்து எமது எதிர்கால சமூகம் என்ன நிலைக்கு செல்லப்போகின்றது என்ற கவலை இன்று அனைவருக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இதேபோன்று பொருளாதார ரீதியான நலிவுகளும் இன்று கிழக்கில் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றன.பொருளாதார ரீதியாக ஏற்படும் பின்னடைவுகள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி தற்கொலைக்கு ஒருவரை கொண்டுசெல்லும் நிலைக்கு தள்ளுகின்றது.

கடந்த காலத்தில் யுத்தம் என்னும் தமிழர்களின் உணர்வுரீதியான விடயங்கள் தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் மனநிலையினையே உருவாக்கியிருந்தது. ஆனால் இன்று சில நேரங்களில் வெற்றிகள் கூட தோல்வி மனப்பான்மையினை ஏற்படுத்தும் வகையில் அமையும் நிலையே காணப்படுகின்றது.

தென் கிழக்கு தமிழீழத்தில் தமிழர் தாயகப்பகுதியில் கடந்த காலத்தில் பல்வேறு அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் நடைபெற்றுவரும் நிலையில் அதனை பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் எதிர்கொள்ளப்பட்டுவரும் நிலையில் தமிழர்களின் கட்டமைப்புகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் எதிர்காலத்தில் தமிழ் தேசிய போராட்டத்தில் பாரியளவிலான தாக்கத்தினை செலுத்தும் நிலையே உள்ளது.

தற்போதுள்ள நெருக்கடியான இந்த சூழ்நிலையினை எதிர்கொள்ளும் வகையில் வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழங்கள் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் ஆய்வுகளை முன்னெடுக்கவேண்டும்.அந்த ஆய்வுகள் மூலம் இனங்காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு கல்வி சமூகம் முன்வரவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

Leave a Reply