அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி சிறைவைக்கப்பட்டுள்ள சூடானிய அகதிகள் 

Juma and Zackria Sudan Refugees அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி சிறைவைக்கப்பட்டுள்ள சூடானிய அகதிகள் 

சூடானில் பிறந்த ஆண்கள், பெண்கள் என அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்புகளில் உள்ள 10 சதவீதம் பேர் சூடானியர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் தடுப்பு முகாம்களை விட்டு வெளியேறுவது சாத்தியமற்றது என நம்பிக்கையற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் இருப்பதற்கான சரியான விசா இல்லாதவர்கள் குடிவரவுத் தடுப்புக்கு செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர். அவ்வாறான நபர்களுக்கு புதிய விசா அல்லது அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படும் வரை அவர்கள் தடுப்பு முகாமிலேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு சூடான் இரண்டு நாடுகளாக பிரிந்தது. வடக்கு சூடான் பெரும்பாலும் அரபு மொழி பேசும் நாடாகவும் தெற்கு சூடான் பல்வேறு இனக்குழுக்களை கொண்ட நாடாகவும் உள்ளது.

தெற்கு சூடானின் பிரிவு, உள்நாட்டுப் போர் என அப்போது சூடானே பெரும் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியது. இதில் 380,000 உயிரிழப்புகள் நிகழ்ந்தன. பல இலட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறினர்.

சூடான் இரு நாடுகளாக பிரிவதற்கு முன்பு வெளியேறிய மக்களே தற்போது அவுஸ்திரேலியாவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்கின்றனர். வடக்கு சூடான், தெற்கு சூடான் என இரு நாடுகளுமே இவர்கள் தங்கள் நாட்டு மக்கள் என அங்கீகரிக்கவில்லை. இதனால் இவ்வாறான நிலையில் சிக்கியுள்ள சூடானியர்கள் நாடற்றவர்களாக உள்ளனர்.

சகோதரர்களான ஜூமாவும் (35), ஜாக்காரியாவும் (32) அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் எட்டு ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது தாயும் உடன்பிறந்தவர்களும் ஆஸ்திரேலிய குடியுரிமைப் பெற்றவர்களாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு முதல் இவர்களை தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்காக 50 இலட்சம் டொலர்களை ஆஸ்திரேலிய அரசு செலவு செய்திருக்கிறது.

கடந்த 2001ம் ஆண்டு சூடானிலிருந்து அகதிகளாக வெளியேறிய இவர்கள் அப்போது சிறார்களாக இருந்திருக்கின்றனர். பின்னர் எகிப்து அகதி முகாமில் இரண்டு ஆண்டுகளாக இருந்த இவர்கள் குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் மனிதாபிமான விசா வழங்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்பட்ட நிலையில், சிறு குற்றங்களிலும் ஒரு சம்பவத்தில் ஒருவருடனான தகராறில் அவரின் மண்டை உடைத்ததற்காகவும் இரண்டு பேரும் தண்டிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஜூமா நான்காண்டுகள் சிறையில் இருந்த நிலையில், தண்டனைக் காலம் முடிவடைவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு குடிவரவுத்தடுப்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். பின்னர் அவரது அவுஸ்திரேலிய நிரந்தர விசாவை அப்போதைய உள்துறை அமைச்சர் (பின்னர் பிரதமர்) ஸ்காட் மாரிசன் ரத்து செய்திருக்கிறார்.

ஜாக்காரியவுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் ஆறு மாதங்களுக்கு பிறகு பரோலில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர் வேலை செய்து கொண்டு 18 மாதங்கள் வெளியில் இருந்த சூழலில் அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டு குடிவரவுத் தடுப்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் தெற்கு சூடான் இவர்களை தங்களது நாட்டவர்கள் என அங்கீகரிக்கவில்லை, மறுபக்கம் ஆஸ்திரேலியாவும் விசாவை இரத்து செய்துவிட்டது என்பதால் அவர்கள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் தடுப்பு முகாமில் சிக்கியிருக்கின்றனர்.

இவர்கள் செய்த குற்றங்கள் அவுஸ்திரேலிய சமூகத்துக்கு ஆபத்தானத் என்ற அடிப்படையில் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவர்களின் இந்த நிலைக்கு அவுஸ்திரேலியாவில் நிலவும் இனவாதமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

எந்த உதவியுமின்றி அவுஸ்திரேலிய சமூகத்தில் என்னை உள்ளடக்கிக் கொள்ள தான் போராடி வேண்டி இருந்ததாகவும் அதன் காரணமாகவே தான் குற்றங்களில் ஈடுபடும் நிலைக்கு ஆளானதாகவும் கூறுகிறார் சூடானிய அகதி ஜூமா.

நாடற்ற இவர்களை விடுவிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்கிறார் மனித உரிமை வழக்கறிஞர் அலிசன் பட்டிசன்.

இவ்வாறான நிலையில் பல சூடானியர்கள் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிபிடத்தக்கது