முடிசூடும் எங்கள் அரசரான 3வது சார்ள்ஸ் அவர்களைப் பிரித்தானியத் தமிழர் என்ற உரிமையுடன் ‘இலக்கு’ வாழ்த்துகின்றது

Photos: The crowning of King Charles III | Gallery News | Al Jazeera

இன்று 06.05. 2023ம் நாள் உலக வரலாற்றில் பிரித்தானியாவின் 3வது சார்ள்ஸ் அரசர் முடிசூடிய நாளாகத் தன்னைப் பதிவாக்குகிறது.

மாட்சிமைக்குரிய பிரித்தானிய அரசர 3வது சார்ள்ஸ் அவர்களுக்குப் பிரித்தானியத் தமிழர்கள் சார்பாகவும் இலக்கு ஆசிரிய குழுசார்பாகவும் எமது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் முதலில் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

ஐக்கிய இராச்சியத்தின் இறைமையின் மீயுயர் சின்னமாக இலங்கும் மாண்பமை; 3வது சார்ள்ஸ் அரசராகிய உங்களுக்கு,, ஈழத்தமிழர்களை இனஅழிப்பில் இருந்து தடுப்பதற்கு ஈழத்தமிழர்கள் பால் உங்களுக்கு உள்ள பொறுப்பையும் கடமையையும் மீள்நினைவுறுத்த விரும்புகின்றோம்.

இலண்டனின் கிழக்கிந்தியக் கம்பெனி 1796இல் மதராசில் (இன்றைய சென்னை) இருந்து தமிழகத்தையும் ஈழத்தையும் ஒரே அரசியல் அலகாக ஒரே நிதிப்புழக்கத்துடன் அட்சி செய்யத் தொடங்கியது முதல் மாட்சிமைக்குரிய 2வது எலிசபேத் அரசி அவர்களின் ஆட்சியில் 22.05. 1972இல் பிரித்தானியாவின் சோல்பரி அரசியல் அமைப்பினைச் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி வன்முறைப்படுத்தி ஈழத்தமிழர்களை அரசற்ற தேசஇனமாக்கும் வரை பிரித்தானியப் பேரரசிடமே ஈழத்தமிழர்களின் இறைமையைப் பாதுகாத்து அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியான ஆட்சியையும் வளர்ச்சிகளையும் உறுதி செய்யும் பொறுப்பு தொடர்ந்தது என்ற வரலாற்று உண்மையை எங்களின் அரசராகிய உங்களுக்கு மீள்நினைவூட்ட விரும்புகின்றோம்.

1969 ஆண்டில் பிரித்தானியாவின் பிரவிக்கவுன்சில் சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை அரசாக ஈழத்தமிழர்களின் இறைமையையும் சிங்களவர்களின் இறைமையையும் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றமுறையில் இணைத்து பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய பொழுது மதங்கள் அல்லது இனங்களுக்கு எதிரான சட்டங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பிரிவிக் கவுன்சிலுக்கு மேன் முறையீடு செய்யலாம் என்ற சோல்பரி அரசியல் அமைப்பின் 29(2) வது பிரிவுக்கு எதிரானது என்பதால் அதனை மீள்ஆய்வு செய்யுமாறு அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தச் சிறிலங்கா தவறியமையே இன்று வரை ஈழத்தமிழர்கள் இனத்துடைப்பு இனஅழிப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்னும் முந்நிலைப்பட்ட அனைத்துலகக் குற்றங்களைச் சிறிலங்கா தொடர்வதற்கான பலத்தைச் சிறிலங்காவுக்கு அளித்து வருகிறது.

இதனால் சமகாலத்தில் ஈழத்தமிழர்கள் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினை ஒன்றின் வழி தங்கள் உயிர் உடைமைகள் நாளாந்த வாழ்வுக்கான இனங்காணக் கூடிய அச்சத்தை சிறிலங்காப் படைகளின் வழி அனுபவித்து வரும் உலகின் மக்களினமாக உள்ளனர். எனவே உங்களின் புதிய ஆட்சிக்காலம் கடந்த ஆண்டு ஆரம்பமாகி இன்று பாரம்பரிய முறைப்படி நீங்கள் முடிசூடுகின்ற இந்நாளில் பிரித்தானிய இனத்துவ் சிறுபான்மையினமாக உங்களின் குடிகளாக உள்ள நாங்கள் எங்களுடைய ஈழத்தமிழினத்திற்கும் பிரித்தானிய அரசுக்கும் இடை இருந்து வந்த பிரிக்கப்பட முடியாத உறவுகளை மீள்நினைவு கூர்ந்து நாங்கள் இன்று அதே உறவு உணர்வுடன் பிரித்தானிய குடிமக்களாகத் தங்களின் அரசின் உறுதிப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் நாம் செய்ய வேண்டிய கடிமக்களுக்குரிய சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகக் கடமைகளைச் செய்வதற்கு எமக்கு உளவியல் தடையாக இருந்து வரும் எமது தாயக மக்கள் இனஅழிப்புக்கு உள்ளாகும் நிலையை மாற்ற உங்களின் தலைமையிலான ஐக்கிய இராச்சிய அரசு மூலமான அனைத்து ஏற்புடைய செயற்பாடுகளையும் செய்து உதவுமாறு பணிவன்பாக நீங்கள் முடிசூடும் இந்நன்னாளில் எங்களின் அரசர் என்ற உரிமையுடன் வேண்டுகின்றோம்.