ஈழத்தமிழரின் இறைமை மேலான ஆக்கிரமிப்பை நீக்க கூட்டொருங்கு சனநாயகச் செயற்பாடே ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 233
இலங்கைத் தீவில் பௌத்த மரபு உரிமைப் பேணல் என்ற சிறிலங்காவின் ஈழத்தமிழர் பண்பாட்டு இனஅழிப்புத் திட்டம் உச்சக்கட்டத்தை எய்தியுள்ளது இதனையே தையிட்டியில் தனியார் காணிகளை அகப்படுத்தி கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையும் அதனை அகற்றுவதற்கு சனநாயகவழிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மக்களின் போராட்டங்களும் அவற்றை அலட்சியம் செய்து, நாங்கள் எதுவும் செய்வோம் எனப் பதிலளிக்கும் பௌத்த தேரர்களின் சர்வாதிகாரப்போக்கும் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.
இன்று இறைமை என்பது வாழும் மக்களுக்கு அவர்கள் மண்ணின் மேலுள்ள அதிகாரம் என்கின்ற புதிய வரைவிலக்கணம் அனைத்துலக அரசியல் உலகில் நிலைபெற்று வருகிறது. இதனால் ஈழத்தமிழர்க்கு அவர்களின் மண்ணின் மேலுள்ள அதிகாரத்தைப் பறிப்பதன் வழி அவர்களின் இறைமையை இழக்கச் செய்தல் என்பது தான் இன்று சிறிலங்காவின் சமகாலத் திட்டமாகவுள்ளது.
இந்நேரத்தில் தனியாருக்குச் சொந்தமான இந்த இடத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்கான திட்டஅனுமதியைத் தமிழரசுக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமசபை வழங்கியதும் இந்த விகாரை கட்டியெழுப்பப்படுகையில் அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எதையும் எடுக்காத ஈழத்தமிழர்களின் இன்றையத் தமிழ் அரசியல்வாதிகளும் தான் ஈழத்தமிழர்கள் தங்கள் நிலத்தின் மேலுள்ள அதிகாரத்தை இழக்க ஒவ்வாரு விடயத்திலும் மூலகாரணமாக உள்ளனர்.
2009 சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்குப் பின்னர் உலகின் மனித உரிமைக்கும் அமைதிக்கும் உழைக்கும் மக்கள் அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் மூலம் வெளியகப் பொறிமுறை மூலம் பாதிப்புற்ற ஈழத்தமிழர்களுக்கான நீதியைப் பெறுவிக்க முயற்சித்த நேரத்தில் சிறிலங்காவின் சிங்கக் கொடியைத் தலைக்குமேல் தூக்கிப்பிடித்து சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறை மூலம் தீர்வு பெறலாம் என உலகுக்கு அறிவித்து சிறிலங்காவின் இறைமையை ஏற்று அதனை மீறி உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் ஈழத்தமிழர்களுக்கு உதவ இயலாத அரசியல் எதார்த்தத்தை உருவாக்கிக் கொடுத்து மகிந்த கோட்டபாய இனஅழிப்புக் கும்பல் மேல் அனைத்துலகச் சட்டங்கள் பாயாது தடுத்த ராசபக்ச குடும்ப அரசியலின் பாதுகாவலர்தான் சம்பந்தர். இன்றும் மே 9இல் ரணிலுடன் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்குப் போய் இன்று ரணில் இந்தியாவுக்கு அது விதித்த சில நிபந்தனைகளை நிறைவேற்றாது போகவியலாதுள்ள நிலையை மாற்ற 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயல்வதாக காட்ட உறுதுணை செய்யவுள்ளார். தமிழரசுக்கட்சியுடன் பேசியதன் பின்னரே வடக்கு எம்பிக்களுடன் மே 11,12, 13 இல் சந்திப்புவென வடக்கு என்றும் கிழக்கு என்றும் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் ரணிலின் ராஜதந்திர முயற்சிகளுக்கும் தமிழரசுக்கட்சியின் சந்திப்பு பலமளிக்கும் என்பது உறுதி. இதற்கிடை முன்னாள் வடமகாணசபைத் தலைவர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி உட்பட 12 அங்கீகரிக்கப்பட்ட தமிழ்க்கட்சிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தை நடத்தி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடைக்காலசபை யொன்றை அமைக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதியைக் கோரமுயற்சிக்கின்றனர். இவை எல்லாமே ஈழத்தமிழரின் இறைமையைப் பற்றிப் பேசாது, சம்பந்தரினது சிறிலங்காவின் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி முறைக்குள் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற கருத்தியலின் விளைவான அரசியல்தான். இதுவே சம்பந்தர் எம் பியாகவுள்ள திருகோணமலையில் தமிழரின் மதமும் மக்கள் தொகையும் மூன்றாவது இடத்துக்குப் போகவைத்துள்ளது. அதன் தொடர்நிலையாகத் தமிழரின் பண்பாட்டு மையமான யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்ளேயே குருந்தூர்மலை, தையிட்டி வரை சாதாரண பௌத்த பிக்குகளே சர்வாதிகாரிகளாக தமிழரின் பண்பாட்டு இடங்களை இடித்தழிக்கவும் தங்களின் பௌத்த சின்னங்களையும் விகாரைகளையும் தமிழரின் வழிபாட்டிடங்களின் மேலேயே எவ்வித அச்சமோ தயக்கமோ இன்றி கட்டியெழுப்பவும் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு துணிவு அளித்து வருகிறது. தேசிய சுதந்திர முன்னணி என்ற அமைப்பு இந்துதுவா கொள்கை அடிமைகளால் ஆபத்துக்கு உள்ளாகும் வடக்கு கிழக்கில் பௌத்த மரபுரிமைகளைக் காக்க மகாநாயக்கர்கள் தலையிட வேண்டும் என மதக் கலவரம் ஒன்றை உருவாக்கக் கூடிய முறையில் செயற்படத் தொடங்கியுள்ளது.
மேலும் சீனா இந்தியா என்னும் இருதரப்பிலும் கூடவே பலதரப்பிலும் தான் இணைந்து பணியாற்றுவதாக ரணில் விக்கிரமசிங்கா வெளிப்படுத்தியுள்ள அணிசேராக் கொள்கையை இரஸ்யாவுக்கான சிறீலங்காத் தூதுவர் பாராட்டி உள்ளதும் அல்லாமல் ரஸ்யாவின் வெளிவிவகாரப் பேச்சாளர் அமெரிக்கா இனஅழிப்புச் செய்ததாக நிரூபிக்கப்படும் சிறிலங்கா படையினருக்கு அனைத்துலக சட்டங்கள் மரபுகளுக்கு அமைய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் உரிமையினை அந்த ரஸ்யாப் பேச்சாளர் நாட்டின் இறைமைக்குள் தலையிடும் செயலாக விளக்கி அமெரிக்காவுக்கு சிறிலங்காவின் உள்விவகாரத்தில் தலையிட உரிமையில்லையெனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இவ்வாறு ரஸ்யாவைக் கொண்டு அமெரிக்காவைத் தங்கள் சார்பாக எச்சரிக்க வைக்கும் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மாட்சிமைக்குரிய பிரித்தானிய அரசர் 3வது சார்ள்ஸ் இன் முடிசூட்டு விழாவில் நாடுகளின் தலைவர்களுள் ஒருவராகக் கலந்து கொள்ளும் அதே நேரத்தில் தன்னோடு எண்மர் கொண்ட இராஜதந்திரக் குழுவொன்றையும் அழைத்து வந்து சிறிலங்கா கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான பிரித்தானியா உட்பட்ட மேற்குலக நாடுகளின் நிதிப்பலத்தையும் மதி வளத்தையும் பெறும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
தொடர்ந்து விரைவில் இந்தியா சென்று கடன் சீரமைப்புத் திட்டத்தை அனைத்துலக நாணய நிதியத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான அனைத்துலக ஆதரவை திரட்டுவதற்கான முயற்சிகளில் ரணில் இறங்கவுள்ளார். அதே வேளை இந்தியாவுக்கு இலங்கையில் எரிபொருள் வழங்கலில் அதற்கிருந்த முற்றுரிமையை இழக்கவைக்கும் சீன, அவுஸ்திரேலிய அமெரிக்க கூட்டு எரிபொருள் வழங்கலை ஒரு மாதத்துள் நடைமுறைப்படுத்தவும் உள்ளார். அவருடைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீனாவின் 1500 மில்லியன் ரூபா பெறுமதியான வீடமைப்புக்களை யாழ்ப்பாணத்தில் மீனவர்களுக்கு வழங்கி இந்திய இலங்கை கடற்கரையோரத்தில் இந்தியாவின் முற்றுரிமையை மட்டுப்படுத்தும் திட்டத்தைத் தொடங்கவுள்ளார். கூடவே யப்பானையும் ஆசிய அபிவிருத்தி வங்கியையும் மீனவர்களுக்கான நிதியுதவிகளை வழங்க வைத்து இந்தியாவின் முற்றுரிமையை உதவிநிலையையும் கூட மாற்றவுள்ளார்.
இவைகளை எல்லாம் எடுத்து நோக்குகையில் ஈழத்தமிழரின் இறைமை மேலான ஆக்கிரமிப்பை நீக்க, கூட்டொருங்கு சனநாயகச் செயற்பாடே ஒரே வழி என்பதை இலக்கு மீளவும் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.