சூடானில்  மனிதப் பேரவலம் ஏற்படலாம் – ஐ.நா

சூடானில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததால் அங்கு மோதல்கள் தொடர்கின்றது. இது அங்கு மிகப்பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சூடான் இராணுவத்திற்கும், விரைவு உதவிப் படையினருக்கும் இடையில் கடந்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகிய மோதல்கள் தற்போதும் தொடர்கின்றன. இதுவரையில் அங்கு 550 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4,926 பேர் காயமடைந்துள்ளதாக சூடான் தகவல்கள் கடந்த செவ்வாய்கிழமை (2) தெரிவித்திருந்தன.

மோதல்கள் அரச தலைவர் மாளிகை மற்றும் இரணுவ தலைமையகம் ஆகிய பகுதிகளை சுற்றி இடம்பெறுவதுடன், சூடானுக்கான விநியோகங்களும் தடைப்பட்டுள்ளன. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் 7 நாட்கள் போர் நிறுத்தம் கொண்டுவர திட்டமிடப்பட்டபோதும், அது வான் தாக்குதல்களினால் கைகூடவில்லை.

அதேசமயம், சூடானுக்கான உணவு விநியோகத்திற்கு இரு தரப்பும் உத்தரவாதம் தரவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பிரிவின் தலைவர் மார்டீன் கிறிபித் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை (3) சென்ற விநியோக தொடரணியில் 6 வாகனங்கள் சூறையாடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போர் ஆரம்பமாகிய பின்னர் இதுவரையில் 100,000 பேர் சூடானை விட்டு வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர். 42,000 பேர் எகிப்த்துக்கு சென்றுள்ளனர். அவர்களில் 2300 வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள்.