இலங்கை-அழுத்தத்தின் ஊடாக வெற்றி -துரைசாமி நடராஜா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தப்பியோடியதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு புதிய ஜனாதிபதியாகும் வரம் கிடைத்திருக்கின்றது. அடுத்த இரண்டரை வருட காலத்துக்கு அவர் இப்பதவியை வகிக்கவுள்ள நிலையில் அவரின் பதவிக்காலம் மிகவும் சவால் மிகுந்ததாகவே அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ரணிலுக்கு பகிரங்கமாக ஆதரவினை வழங்கிய கட்சிகளுள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் குறிப்பிடத்தக்க கட்சியாகவுள்ளது.

ரணில் தொடர்பில் வக்கிர அலைகள் அதிகரித்து வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் இ.தொ.கா.வின் இந்த துணிகர முடிவு பாராட்டத்தக்கதே எனினும் இந்த ஆதரவை மையப்படுத்தி மலையக மக்களின் தேவைகள் பலவற்றையும் நிறைவேற்றிக்கொள்ள இ.தொ.கா. அதிகளவான அழுத்தத்தை ஜனாதிபதிக்கு வழங்கவேண்டும் என்பது பலரினதும் கருத்தாகவுள்ளது.

இலங்கை அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் சகல துறைகளும் ஆட்டம் கண்டு வருகின்றன.அத்தோடு ஸ்திரப்பாடு இல்லாத அரசியல் நிலையானது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடன் சுமை நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் மோசமடைந்துள்ளது.இதனிடையே இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும்  பொருளாதார நெருக்கடி உலகின் ஏனைய நாடுகளுக்கான எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு பணவீக்க அதிகரிப்பானது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியமுள்ளது.உயர்வான கடன்களையும் வரையறுக்கப்பட்ட கொள்கைகளையும் கொண்டிருக்கும் நாடுகள் மேலும் பாதிப்படையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் மத்தியில் ம்க்களின் எதிர்ப்பலை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு தப்பியோடும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பினூடாக ரணில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் கோட்டாபய பதவி விலக வேண்டுமென்று போராட்டக்காரர்கள் குரலெழுப்பியபோதும் பின்னர் ரணில் பிரதமரானதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவையும் அப்பதவியில் இருந்து கீழிறங்குமாறு கோஷங்கள் வலுவடைந்தன.என்றபோதும் இதற்கெல்லாம் அஞ்சாது அரசியல் யாப்பின் அடிப்படையில் தற்போது ரணில் ஜனாதிபதி பதவியையும் எட்டிப் பிடித்திருக்கின்றார்.எது எப்படியானபோதும் நாட்டின் ஜனாதிபதியாகும் ரணிலின் நீண்ட கால கனவு இப்போது நனவாகி இருக்கின்றது என்பதனையும் மறுப்பதற்கில்லை.

  எதிர்ப்பலைகள்

மத்திய வங்கி ஊழல், ராஜபக்சாக்களின் பாதுகாவலர் என்பதுபோன்ற பல விடயங்களை மையப்படுத்தி ஜனாதிபதி ரணிலை பதவி விலகுமாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்து வரும் ஜனாதிபதியின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் சவால் மிக்கதாகவே அமையுமென்பதோடு எதிர்ப்பலைகளை தாக்குபிடித்து தமது பதவிக்காலத்தை வெற்றிகரமாக ஜனாதிபதி நிறைவு செய்வாரா? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. ரணில் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர் சர்வதேசத்தின் அபகீர்த்திக்கு உட்பட்டவர்கள். அவ்வாறானவர்களோடு இணைந்திருப்பதென்பது சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு தீனிபோடுவதாகவே அமையும்.இந்நிலையில் ஜனாதிபதி எல்லா மக்களையும் அரவணைத்து செயற்பட வேண்டிய நிலையில் அதன் சாதகத்தன்மை எவ்வாறு அமையும்? என்பதையும் பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது.

ரணில் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து சர்வதேசமும் உடனடி உதவிகளை வழங்கும் என்று சொல்வதற்கில்லை.ரணிலின் பின்புலம் இதில் கணிசமான தாக்கத்தை செலுத்துகின்றது.

ஜனாதிபதி தெரிவுக்கென்று வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்ட நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மை கட்சிகள் டலஸ் அழகப்பெருமவிற்கு தமது ஆதரவை வழங்கியிருந்ததோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பகிரங்கமாக தனது ஆதரவை அறிவித்தது.

ரணில் மீதான நாட்டு மக்களின் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் இ.தொ.கா.வின் இந்த முடிவு தொடர்பில் அதிருப்தியான வெளிப்பாடுகளே அதிகமாக இருந்துவந்தன.ஏற்கனவே பொதுஜன பெரமுன அரசின் பங்காளிக் கட்சியாக இ.தொ.கா. செயற்பட்டு வந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் பதவியும் ஜீவன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்தது.பொதுஜன பெரமுனவின் செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலையில் இ.தொ.கா.வின் செல்வாக்கும் மலையகத்தில் படிப்படியாக சரிவடைவதை அவதானிக்க முடிந்தது.தொடர்ந்தும் இ.தொ.கா. பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுமானால் அது தனக்குத்தானே குழி தோண்டிப் கொண்டதற்கு ஒப்பாகிவிடும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனிடையே இக்கட்சி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப்போவதாக அறிவித்து  இராஜாங்க அமைச்சு பதவியையும் துறந்தது.இவற்றுக்கும் மத்தியிலேயே ஜனாதிபதி தெரிவில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை இ.தொ.கா. மேற்கொண்டிருந்தது. இம்முடிவு ஒரு துணிகரமான முடிவாகவும் இருந்தது.ஊசி முனையில் இ.தொ.கா. இருப்பதாகவும் சிலர் விமர்சித்திருந்தனர்.

இ.தொ.கா.விற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முன்னதாக நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா ஆகியோரின் வெற்றியில் மலையக மக்களின் பங்களிப்பு கணிசமாக அமைவதற்கு இ.தொ.கா. வலுசேர்த்திருந்தது.மலையக மக்களுக்கும் ஐ.தே.க. விற்கும் இடையே ஒரு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவதில் இ.தொ.கா.முக்கிய பங்காற்றி இருந்தது.

ஐ.தே.க.வின் கொள்கைகள் எவ்வாறாக இருப்பினும் மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல் இ.தொ.கா. வின் கோரிக்கையை ஏற்று ஐ.தே.க.விற்கு வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.எனினும் பின்வந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இ.தொ.கா. தொடர்பை வளர்த்துக் கொண்ட நிலையில் 2005, 2010, 2015  ஆம் வருடங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்தவின் கரத்தை இக்கட்சி பலப்படுத்தியிருந்தது. எனினும் 2015  ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி சாத்தியமாகவில்லை என்பதும் அறிந்ததேயாகும்.2019 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை இ.தொ.கா.ஆதரித்திருந்தது.

 சோளப்பொறி

எவ்வாறெனினும்  இ.தொ.கா. இப்போது நீண்ட இடைவேளையின் பின்னர் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தெரிவின்போது ஆதரித்திருக்கின்றது.இது ஒரு நல்ல சகுனமாகும்.விமர்சனங்களை புறந்தள்ளி இ.தொ.கா. ரணிலுக்கு வழங்கிய ஆதரவு பலனளித்திருக்கின்றது.

இந்த ஆதரவினூடாக இ தொ.கா. மலையக மக்களின் அபிவிருத்தி கருதி ஜனாதிபதியை வலியுறுத்தி பல்வேறு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.மலையக மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து செல்கின்றன.அவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ளன.

பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அரசியல் போன்ற பல துறைகளிலும் உரிய இலக்கை மலையக மக்கள் எட்டாத நிலையே இன்னும் காணப்படுகின்றது. மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மலையக அரசியல்வாதிகள் அவ்வப்போது அரசாங்கத்தை வலியுறுத்தி சிற்சில அபிவிருத்திகளை பெற்றுக் கொடுத்து வருகின்றபோதும் அவையனைத்தும் “யானைப் பசிக்கு சோளப்பொறியைப் “போன்றதேயாகும் என்பதையும் குறிப்பிட்டாதல் வேண்டும்.

ஆளும் தரப்புடன் இணைந்து செயற்படுவதாலும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதாலும் மக்களுக்கு அதிகமான சேவைகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்ற தோரணையில் இ.தொ.கா. தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளது.அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கான அடித்தளத்தை இட்டிருந்த நிலையில் பின்வந்த கட்சிகளும் இதனைக் கைக்கொள்ளத் தொடங்கின.எனினும் மலையகக் கட்சிகள் ஆளுந்தரப்புடன் இணைந்து செயற்படுகின்றபோதும் மக்களுக்கு உரிய நன்மைகளை பெற்றுக் கொடுக்கவில்லை என்றவொரு பலமான குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது.

இ.தொ.கா. விற்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு சற்று பலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமான முறையில் இ.தொ.கா. இணைந்து செயற்பட்டபோதும் இந்த நெருக்கமானது மலையக மக்களின் எழுச்சிக்கு உரியவாறு தோள் கொடுக்கவில்லை என்பது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.

இவற்றுக்கும் மத்தியில் இ.தொ.கா. ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கி கையைச் சுட்டுக் கொள்ளாது தப்பிப் பிழைத்திருக்கின்றது.

இந்த ஆதரவு வெறுமனே அரசியல் காய் நகர்த்தலோடு நின்றுவிடக் கூடாது.இதன் மூலம் மலையக மக்களின் பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இ.தொ.கா. முன்வருதல் வேண்டும்.தற்போது மலையகத்தில் சரிவைச் சந்தித்துள்ள இக்கட்சி இத்தகைய சேவைகளின் ஊடாக தன்னை தூக்கி நிறுத்திக்கொள்ள முற்படுதலும் வேண்டும்.இதேவேளை ரணில் பிரதமராக பல தடவைகள் பதவி வகித்தபோதும் மலையக மக்களின் நலன்கருதி காத்திரமான முன்னெடுப்புக்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றதொரு கருத்தும் இருந்து வருகின்றது.வாய்ப்பிருந்தும் கூட அவர் இதில் அக்கறை செலுத்த தவறியுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இதேவேளை பெருந்தோட்டங்கள் சவால்களை சந்தித்து வருகின்றபோதும் அவற்றின் அபிவிருத்தி மற்றும் தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாடு  தொடர்பில் கரிசனை கொள்ளாது சிறு தோட்டங்களின் அபிவிருத்தி தொடர்பிலேயே அவர் முன்னின்று செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே தற்போது ரணில் ஜனாதிபதியாகியுள்ள நிலையில் மலையக மக்கள் குறித்த அவரின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப் போகின்றன? என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.அத்தோடு அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜனாதிபதி  ரணிலுக்கு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரணில் மலையகம் தொடர்பில் பல  அபிவிருத்திகளை மேற்கொள்ள நினைத்தாலும் அது எந்தளவுக்கு சாத்தியப்படும்? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.நிலைமைகளை பொறுத்திரூந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.