நாட்டில் பொருளாதார நெருக்கடி மிக மோசமாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பொருளாதார நெருக்கடி புரட்டிப் போட்டிருக்கின்றது, வாழ்;க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் குடும்பங்கள் அந்தரித்துக் கொண்டிருக்கின்றன.
நிலைமைகளைச் சமாளிக்க முடியாமல் சட்டவிரோதச் செயற்பாடுகள் உள்ளிட்ட கவலை தரும் நடவடிக்கைகளில் குடும்பங்கள் ஈடுபட்டிருக்கின்றன அவ்வாறு ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நிலைமைகளைச் சீர் செய்து நாட்டில் இயல்பு நிலைமையை உருவாக்குவதற்கான ஒன்றிணைவையும், ஒன்றிணைந்த செயற்பாடுகளையும் அரசியல்வாதிகளிடம் காண முடியவில்லை.
உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, அவற்றின் விலையேற்றம் என்பன குடும்பங்களை மிக மோசமாகப் பாதித்திருக்கின்றன. உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக குடும்பங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்களின் உணவு நுகர்ச்சியைக் கணிசமாகக் குறைத்திருக்கின்றன. சாதாரணமாக மூன்று வேளைகள் உணவருந்திய குடும்பங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்திருக்கின்றன.
மூன்று வேளையும் உணவருந்த முடியாமையினால், பல குடும்பங்கள் இரண்டு வேளைகளிலேயே உணவருந்துகின்றன. மேலும் பல குடும்பங்கள் உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் ஒரு வேளை உணவுடன் நாட்களைக் கடத்தத் தொடங்கியிருக்கின்றன. இதனால் மக்கள் உணவுப் பற்றாக்குறையுடன் போராட வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். உணவுக்கான இந்தப் போராட்டம் பொருளாதார நெருக்கடி நிலைமையின் மிக மோசமான சமூகப் பிரதிபலிப்பாகும்.
எரிபொருளின் விலையேற்றமும் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகமும், மின்விநியோகத் தடையும் குடும்பங்களின் வாழ்வாதார முயற்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. தொழில் துறைகள் இயல்பாகச் செயற்பட முடியாமையினால்; பலர் தொழில்களை இழந்துள்ளார்கள். நிரந்தரமாகத் தொழில் புரிந்தவர்கள் மட்டுமல்லாமல், நாளாந்த உழைப்பவர்களும் வேலை இல்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் துறைகளைக் கொண்டிழுக்கின்ற நிறுவனங்கள் பல தமது பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறைத்திருக்கின்றன. இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தொழில் இழப்புக்கு ஆளாகாத இழக்காத போதிலும் குடும்ப வருமான இழப்புக்கு ஆளாகியிருக்கின்றார்கள். இதனால் குடும்பங்களைக் கொண்டு நடத்த முடியாத நிலைமைக்கு அவர்களும் ஆளாகி இருக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் மூன்றிலிரண்டு குடும்பங்கள் உணவுக்காகப் போராடுவதாக சேவ் த சில்ரன் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 2300 குடும்பங்களிடம் அந்த நிறுவனம் ஆய்வு நடத்தியிருக்கின்றது.
அந்த ஆய்வின்படி, 85 வீதமான குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளமை கண்டறியப்பட்டிருக்கின்றது, இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வருமானத்தின் பெரும் பகுதியை இழந்திருக்கின்றன. பத்தில் ஒன்று என்ற வீதத்திலான குடும்பங்கள் தமது மொத்த வருமானத்தையும் இழந்து தவிக்கின்றமை இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது,
எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி அதிகரிப்பு, உணவுப் பற்றாக்குறை, உணவுத் தட்டுப்பாடு போன்ற காரணங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களில் 35 வீதத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைப்பதற்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 31 வீதமான குடும்பங்கள் மட்டுமே தமது உணவுத் தேவைகளை சமாளிக்கக் கூடிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.
தொழில் இழப்பு, குடும்ப வருமான இழப்பு போன்ற காரணங்களினால் எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளினால் உயிர்வாழ்வதற்கு அவநம்பிக்கையான செயற்பாடுகளுக்குக் குடும்பங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.
இது ஆபத்துக்குரிய நிலைமை என சேவ் த சில்ரன் நிறுவனம் எச்சரிக்கை செய்திருக்கின்றது. வறிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள குடும்பங்கள் குடும்ப ‘நெருக்கடி நிலை’ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டி இருக்கின்றனது.
நிலைமைகளைச் சமாளிப்பதற்காக – நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்காக கடன் வாங்குவது, பிள்ளைகளைப் பாடசாலைகளில் இருந்து விலக்கிக் கொள்வது, அல்லது அத்தியாவசிய சொத்துக்களை விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.
அதேவேளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களில் 3 வீதமான தமது வீடுகளை விற்றல், பிள்ளைகளை தொழில்களில் ஈடுபடுத்தல், சிறுவர்களைத் திருமணம் செய்து கொடுத்தல், பிச்சi எடுத்தல் அல்லது திருடுதல், அல்லது விபசாரத்தில் ஈடுபடுத்தல் போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகளை நெருக்கடி நிலை நடவடிக்கைகளாக மேற்கொண்டிருக்கின்றன என்று சேவ் த சில்ரன் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.
இலங்கையின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கின்றது எனக் கூறியுள்ள சேவ் த சில்ரன் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜுலியன் செல்லப்பா, எரிபொருள் மற்றும் உணவு நெருக்கடி பரவலான உறுதியற்ற நிலைமையை ஏற்படுத்தி இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்த நிலைமையில் என்ன செய்யலாம், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அவர் குறி;ப்பிட்டிருக்கின்றார். இந்த நெருக்கடி நிலைமையைத் தணிப்பதற்கு நிலையானதோர் அரசியில் தீர்வைக் காண வேண்டும். நாட்டைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும். குடும்பங்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஊட்ட வேண்டும். இது ,குறித்து நாங்கள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அவர் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல. நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை அவசரமாக வழங்கவும், இந்த நெருக்கடி நிலைமை மேலும் பரவாமல் தடுக்கவும் நன்கொடை வழங்குனர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதற்கு கண்டபடி நாடுகளிடம் கடன்பட்ட ஆட்சியாளர்கள் அவற்றைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிமுறைகளில் தீவிர கவனம் செலுத்தவில்லை. அதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்க்கதரிசனத்துடன் மேற்கொள்ளத் தவறிவிட்டனர். ஆட்சியாளர்கள் கடன்பட, நாட்டு மக்களே கடன்பட்டவர்களைப் போன்று பொருளாதார நெருக்கடிகளினால் கலங்கித் தவிக்கின்றார்கள்.
டொலர் பற்றாக்குறை ஏற்பட்டு, நாட்டு மக்களின் அன்றாட உணவுத் தேவை மற்றும் எரிபொருள், சமையல் எரிவாயு என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு வழிதெரியாமல் விழி பிதுங்கிய நிலைமை வரையிலும் கடன் ,சுமையினாலான எதிர்காலம் குறித்து ஆட்சியாளர்கள் கவலை கொண்டிருக்கவில்லை. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ராஜரீக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவுமில்லை.
இறக்குமதி பொருளாதாரத்திலும், உல்லாசப் பயணிகள் மற்றும் ஆடை ஏற்றுமதியிலும் அந்நியச் செலாவணிக்காகத் தங்கியிருக்கின்ற நாட்டை அந்தத் துறைகளில் நுணுக்கமான வழிமுறைகளில் கொண்டு நடத்த அவர்கள் தவறிவிட்டார்கள்.
குடும்ப அரசியலை நிலைநிறுத்தவும், இனவாத, மதவெறி அரசியலிலும் அதிக ஈடுபாடும், அக்கறையும் செலுத்தியிருந்த ராஜபக்ஷக்கள் நாட்டில் மலிந்திருந்த ஊழல்களைக்கூட கட்டுப்படுத்த முயற்யசிக்கவில்லை. இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் நாடு படுகுழியில் வீழ்ந்துள்ள வேளையிலும்கூட கட்சி அரசியலிலும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நுணுக்க அரசியலிலுமே கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தி இருக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் மக்கள் தன்னெழுச்சி கொண்டு ஒருங்கிணைந்து திரண்டெழுந்த அனுபவத்திலும்கூட அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் பாடம் படிக்கத் தவறியிருக்கின்றனர். இது கவலைக்குரியது. கண்டனத்துக்கும் உரியது.