முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை – அருண ஜெயசேகர

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று   (31) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வரவேற்புரை ஆற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னமும் 1,493.2 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இதில் வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவில் அமைந்துள்ள காணிகள் மிக முக்கியமானவை என்றார்.

இந்த நிலையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும் முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்படும் அசாதாரண மற்றும் இடர் நிலைமைகளின்போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர் களப்பணியாற்றுகின்றனர். போர் நிறைவுற்ற 2009ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.