ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவ வீரரின் நிலை: உக்ரைன் வெளியிட்ட புகைப்படம்

ரஷ்யாவின் பிடியிலிருந்து தப்பிய தங்கள் நாட்டு இராணுவ வீரரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டிருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன.

போர் காரணமாக உக்ரைனில் இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவால் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா செய்த போர் குற்றங்களை உக்ரைன் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் துன்புறுத்தப்பட்ட இராணுவ வீரரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தரப்பில், “உக்ரேனிய சிப்பாய் மைக்கைலோ டியானோவ் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர். அவரது சக போர்க் கைதிகள் சிலர் இன்னும் ரஷ்யாவின் பிடியில் இருக்க, இவர் ரஷ்ய சிறையிலிருந்து தப்பினார். போர் கைதிகள் குறித்த ஜெனிவா உடன்படிக்கைகளை ரஷ்யா இப்படித்தான் கடைப்பிடிக்கிறது. நாசிசத்தின் வெட்கக்கேடான பாரம்பரியத்தை ரஷ்யா இப்படித்தான் தொடர்ந்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளது.

Leave a Reply