ஆசிய பிராந்தியத்தில் பாகிஸ்தானை விட அதிகரித்து வரும் இலங்கையின் பணவீக்கம்

அதிகரித்துவரும் இலங்கையின் பணவீக்கம்

அதிகரித்து வரும் இலங்கையின் பணவீக்கம்: ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் பணவீக்கம் பாகிஸ்தானை விட வேகமாக அதிகரித்து வருவதாக இந்தியாவின் Business Standard இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 22.1 ஆக பதிவாகியிருந்தது.

மக்களின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பணவீக்கம் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளமை அரசாங்கம் வௌியிட்டுள்ள புதிய தரவுகள் மூலம் உறுதியாகின்றது.

டிசம்பர் மாதம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வேகம் 12 .1 ஆக அமைந்திருந்ததுடன், ஜனவரி மாதம் அது 14.2 ஆக அதிகரித்தது.

உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தமையே பணவீக்கத்திற்கான முக்கிய காரணம் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அரிசி, பால் மா, சீனி, பழ வகைகள், பாண் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. உணவுப்பொருட்கள் அல்லாத எரிபொருள் விலை, போக்குவரத்து கட்டணங்கள், எரிவாயு விலை, வீட்டு வாடகை, கல்வி, உணவக மற்றும் ஹோட்டல் கட்டணங்கள் அதிகரிப்பு என்பனவும் ஜனவரி மாதம் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த ஒரு வருட காலத்தில் ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசியின் விலை 65 ரூபாவால் அதாவது 68 வீதத்தால் அதிகரித்துள்ளது. அரிசிக்கான மாற்றீடாக அமைந்துள்ள கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையும் 60 ரூபாவால் அதிகரித்துள்ளது. அது 57 வீத அதிகரிப்பாகும்.

நாட்டின் அநேகமானவர்களின் உணவில் முக்கிய அங்கமாக உள்ள பருப்பின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் 98 ரூபாவால் அதிகரித்துள்ளது. பருப்பின் விலையில் சுமார் 57 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காலப் பகுதியில் சீனி விலையும் 28 ரூபாவால் அதிகரித்துள்ளதை காண முடிகிறது.

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயின் விலையும் 32 ரூபாவால் அதிகரித்துள்ளது. பிள்ளைகள் உள்ள வீடுகளின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பால் மா விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது. 400 கிராம் எடையுடைய பால் மா பக்கெட்டின் விலை 160 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், பட்டர் விலை 60 ரூபாவால் அதிகரித்துள்ளது.

Tamil News