இலங்கை அரசாங்கம் அம்பிகா சற்குணநாதனை துன்புறுத்துவதற்கு அச்சுறுத்துவதற்கு முயல்கின்றது – சர்வதேச மனித உரிமை அமைப்புகள்  குற்றச்சாட்டு

அம்பிகா சற்குணநாதனை துன்புறுத்துவதற்கு

இலங்கையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனிற்கு ஆதரவாக எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. இதனால் இலங்கை அரசாங்கம் அம்பிகா சற்குணநாதனை துன்புறுத்துவதற்கு அச்சுறுத்துவதற்கு முயல்கின்றது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உபகுழுவிற்கு அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையிலேயே மனித உரிமை அமைப்புகள் அம்பிகா சற்குணநாதனிற்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளன.

இலங்கை அரசாங்கம் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை துன்புறுத்தல் அச்சுறுத்தல் என கருதலாம் என சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட எட்டு அமைப்புகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தின் அறிக்கையானது துன்புறுத்தும் அச்சுறுத்தும் ஒன்று என்பது தெளிவான விடயம்,மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம், நன்கு அறியப்பட்ட மதிக்கப்படுகின்ற துணிச்சலான மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சற்குணநாதனிற்கு எங்கள் முழுமையான ஆதரவை நாங்கள் தெரிவிக்கின்றோம் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு துல்லியமான அறிக்கையை சமர்ப்பித்தமைக்காக அவரை இலக்குவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் மனித உரிiமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும் இது இலங்கையின் சிவில் சமூகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துகின்ற செய்தியை தெரிவிக்கின்றது குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்கனவே கடும் அழுத்தங்களிற்கு மத்தியில் செயற்படும் வடக்குகிழக்கை சேர்ந்த சிவில் சமூகத்திற்கு என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இலங்கையின் சர்வதேச சகாக்கள் அரசாங்கத்தின் அறிக்கையை வெளிப்படையாக கண்டிக்கவேண்டும், சற்குணநாதனிற்கு வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்கவேண்டும்,அவர் சர்வதேச சமூகத்துடன் ஈடுபாட்டை காட்டியமைக்காக இலக்குவைக்கப்பட்டுள்ளார் எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையில் புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞரை இழிவுபடுத்தும் முயற்சியாக பல தவறான கூற்றுக்கள் இடம் பெற்றுள்ளன எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அவரது வாக்குமூலம் சமூகங்களிற்கு மத்தியில் ஒரு காலத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய விடுதலைப்புலிகளின் பிரச்சாரம் போல காணப்படுகின்றது – அவ்வாறான குற்றச்சாட்டுகளை சமூக ஐக்கியத்தினை அடிப்படையாக கொண்டு நிராகரிக்கவேண்டியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பாக நயவஞ்சகமானது ஆபத்தானது என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மனித உரிமை ஆர்வலர்களையும் மனித உரிமைக்காக பரப்புரையில் ஈடுபடுபவர்களையும் பிழையாக பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கையை இது வெளிப்படுத்துகின்றது என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Tamil News