இலங்கையின் மனித உரிமை விவகாரம் கவலை அளிக்கின்றது- ஐ.நா

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலும் ஜெனீவாவிலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் ஏனையவர்கள் கண்காணிக்கப்படுவது குறித்த தனது கவலையை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில்,

மனித உரிமை பேரவையின் 43 வது அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து பயணித்தவர்களும் கலந்துகொண்டுவிட்டு இலங்கை திரும்பியவர்களும் விசாரணை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்சில் இடம்பெற்ற மனித உரிமை பேரவை அமர்வின் போது தாங்கள் கண்காணிக்கப்பட்டதாக பல அமைப்புகள் தெரிவித்தன. 2019 டிசம்பரில் மனித உரிமை விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் இந்த வகையான அச்சுறுத்தல்கள் பழிவாங்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு எழுத்துவடிவில் கொண்டுவந்துள்ளார்.

சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர் என்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு கிடைத்துள்ளது.

பொலிஸார் தொடர்ந்தும் விஜயம் மேற்கொள்வது புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் அமைப்புகளிடம் அவர்களின் செயற்பாடுகள் ஐநாவுடனான தொடர்பு பணியாளர்களின் விபரங்கள் குறித்து விசாரணை செய்வது போன்றவை இடம்பெறுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.