இலங்கைப் பெண்கள் ஓமான் கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு விற்பனை : சந்தேக நபருக்கு விளக்கமறியல்

இலங்கைப் பெண்களை  சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச் சென்று அந்நாட்டு கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த மனித கடத்தலின் முக்கிய சந்தேக நபர் ஒருவர்  நேற்று முன்னிதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இதனையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட  44 வயதான மொஹமட் றிஸ்வி மொஹமட் இன்பாஸ் என்ற இந்தச் சந்தேக நபர்,  இந்த மனிதக் கடத்தலுக்கு தலைமை தாங்கியுள்ளதாகவும், வத்தளையிலும் தெஹிவளையிலும்  இரண்டு வீடுகளில் இரண்டு பெண்களுடன் வசித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும்   வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.

அவரைக் கைது செய்வதற்காக பல தடவைகள் இந்த முகவரிகளில் அமைந்துள்ள அவரது வீடுகளுக்குச் சென்றபோதும் அவர் ஏற்கனவே வெளிநாடு சென்றுள்ளதால் அவரைக் கைது செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை நீர்கொழும்பு பதில் நீதிவான் பிரிமல் அமரசிங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது   எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.