இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ மற்றும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோருக்கு இடையே புதுடெல்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற்படைத் தளபதி, வியாழக்கிழமை 27ஆம் திகதி இந்தியப் பாதுகாப்புச் செயலாளரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வழிநடத்தும் முதன்மைச் சட்டகமான ‘இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின்’ கீழ் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதை மையமாகக் கொண்டு இச்சந்திப்பு அமைந்தது. இதன் மூலம் இரு நாடுகளும் பாதுகாப்புத் துறையிலான தங்களது பரஸ்பர அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



