நெடுந்தீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்குதமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவடைந்த நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனர். கென்னடி என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே சிறைபிடித்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் சங்கர் அர்ஜுனன் தர்ம முனியாண்டி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் மீனவர்கள்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்துஇ இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவபிரதிநிதி பிரான்சிஸ் தலைமையில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் புதன்கிழமை (இன்று) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் 20 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு 148 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 2025-ம் ஆண்டின் 3 மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் 10-வது சம்பவத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். பாரம்பரிய மீன்பிடி பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை நான் வலியுறுத்தி கேட்டுக் கொண்ட போதிலும் இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு மீன்பிடி தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால் அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும் இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டு உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 110 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.