இரண்டாவது நாளாகவும்  இலங்கை முடங்கியது                          

ராஜபக்ஷாக்களுக்கு எதிரான போராட்டம்

இலங்கையில் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்றது.இதனடிப்படையில் இன்று (6) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் கடையடைப்பு, ஊர்வலங்கள், பணிப்பகிஷ்கரிப்பு, வீதிமறிப்பு உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.இதில் பல்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பும் இருந்தது.

இலங்கையின் இருண்ட காலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.முறையற்ற முகாமைத்துவ செயற்பாடுகள், பதவி நிலைகள், ஊழல்கள், மோசடிகள் எனப்பலவும் இலங்கையின் சமகாலத்தையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி வருகின்றன.

பல்வேறு நெருக்கடிகளையும் சந்தித்து வரும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றபோதும் ஆட்சியாளர்கள் தமது சிம்மாசனத்தை விட்டும் இறங்குவதாக இல்லை.அரசியல் மோகம், பதவி மோகம் என்பன இதற்கு அடிப்படை காரணமாகி இருக்கின்றது.

IMG20220506080344 01 இரண்டாவது நாளாகவும்  இலங்கை முடங்கியது                          

உலக நாடுகள் எமக்கு பல வரலாறுகளை நினைவூட்டுகின்றன.புகைவண்டி விபத்துக்குள்ளாகும் போது அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தானே இதற்கு காரணமென்று  பொறுப்பேற்று பதவி விலகுகின்றார்.மக்களுக்கு உணவளிக்க முடியாவிட்டால் உணவுத்துறை அமைச்சர் பதவி விலகுகின்றார்.

விவசாயம் பாதிக்கப்படுமிடத்து விவசாயத்துறை அமைச்சர் பதவி விலகுகின்றார்.இவர்கள் பொறுப்புக்களை மற்றொருவர் மீது சுமத்தி குளிர்காய்ந்து கொண்டிருப்பதில்லை.ஆனால் இலங்கையின் நிலைமைகள் இதற்கு விதிவிலக்காகியுள்ளன.என்னதான் நாட்டு மக்கள் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினாலும், ஆட்சியாளர்கள் மீது என்னதான் பிழைகள் இருந்தாலும் அவர்கள் ஒரு போதும் பதவியை விட்டு விலகுவதற்கு தயாராக இல்லை.தான் செய்வதே சரி என்ற நிலைப்பாட்டில் நிலைமைகள் தொடர்நது கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்குனுப்பும்  நோக்கில் காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 28 வது நாளை தொட்டிருக்கின்றது. இளைஞர்களும் மத்திய தர வகுப்பினரும் இரவு பகல் பாராமல் ராஜபக்ஷாக்களை வீட்டுக்கனுப்பும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றார்கள்.

63171c83 water cannon iusf e1651834607102 இரண்டாவது நாளாகவும்  இலங்கை முடங்கியது                          

இதைப்போன்றே பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்பாகவும் ” மைனா கோ” என்ற கருப்பொருளில் போராட்டங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே இலங்கையின் பாராளுமன்ற கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் எதிரொலிப்பது குறைவாக உள்ளது.

அரசியல் கட்சிகள் தமக்கிடையேயான குரோதங்களை வெளிப்படுத்துகின்ற ஒரு இடமாக பாராளுமன்றம் மாறி இருக்கின்றது.அரசியல்வாதிகள் ஒருவர் மீது மற்றொருவர் சேறுவாரி இரைப்பதை இங்கு வழக்கமாகக் கொண்டுள்ளனர்.மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு இங்கு இடமில்லாத நிலையில் ஆட்சியாளர்கள் தமது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தே கூடுதல் கவனம் செலுத்துவதாக இளைஞர்கள் கருதுகின்றனர்.இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களின் கருத்தறிந்து சேவையாற்ற பாராளுமன்றம் முற்பட வேண்டுமென்றும் இல்லையேல் மக்களின் நம்பகத்தன்மையை பாராளுமன்றம் இழக்கும் நிலைமை ஏற்படுமென்றும் தெரிவித்திருந்தார்.இதனிடையே பாராளுமன்றம் மீது மக்கள் இழந்துள்ள நம்பிக்கையின்மையின் வெளிப்பாடே இப்போது நாட்டில் இளைஞர் போராட்டமாக எதிரொலிக்கின்றது என்பதும் தெரிந்த விடயமேயாகும்.

இதனிடையே  பாராளுமன்றத்திற்கு செல்லும் வழியை இடைமறித்து இளைஞர்கள் போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.ஹொரா கோ கம (HORA GO GAMA )  என்று பெயரிடப்பட்டுள்ள ,பாராளுமன்றத்தை அண்மித்த இந்த இடத்தில் இளைஞர்கள் பலர் புதிதாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இவர்களில் பலர் பல்கலைக்கழக மாணவர்களாக விளங்குகின்றனர்.

இந்தப் போராட்டத்தைக் களைப்பதற்கு காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பிரயோகித்தபோதும் இளைஞர்களின் ஒன்றுகூடலையோ அல்லது அவர்களின் ஐக்கியத்தையோ அவை சீர்குலைத்து விடவில்லை.இளைஞர்கள் விவேகத்துடன் போராடி வருகின்றனர்.இவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய பொருட்களை நலன்விரும்பிகள் வழங்கி வருகின்றனர்.இதனிடையே சமகால நிலைமைகளை கருத்தில் கொண்டு பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DSC05781 இரண்டாவது நாளாகவும்  இலங்கை முடங்கியது                          

 ஆட்சியாளர்களுக்கு எதிராக தொடர்போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மக்கள் இதில் பெருமளவில் ஆர்வத்துடன் பங்குபற்றி வருகின்றனர்.இதனிடையே கடந்த மாதம் 28 ம் திகதி பொது வேலை நிறுத்தத்தினை தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.இது இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய வேலை நிறுத்தமாகக் கருதப்பட்டது.

இதனைப்போன்றே இன்றும் பாரிய வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.எல்லா துறைகளும் இதனால் முடக்க நிலையினை அடைந்திருந்தன.வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் கம்பங்களில் கறுப்புக்கொடி பறக்கவிடுப்பட்டிருந்தது.அரசாங்கத்துக்கும் ராஜபக்ஷாக்களுக்கும் எதிரான சுலோக அட்டைகளை ஏந்தியவாறு மக்கள் நாடெங்கும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.காலிமுகத்திடல், அலரி மாளிகை, பாராளுமன்ற நுழைவாயில் போன்ற பல இடங்களிலும்  அதிகளவிலான மக்கள் கூட்டத்தை இன்று அவதானிக்க முடிந்தது.

இலங்கையின் சில நகரங்களில்  “றபான்” என்னும் ஓசையெழுப்பக்கூடிய தோற்கருவியை  அடித்து இளைஞர்கள் மக்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான பாதையும் ஆடைத்தொழிற்சாலை இளைஞர் யுவதிகளின் போராட்டத்தால் தடைப்பட்டிருந்தது.

தனியார்  பேருந்துகள் இன்று முற்றாக  போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடாத நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சில தனியார்  பேருந்துகளே சேவையில் ஈடுபட்டிருந்தன.சுமார் 275  தொடருந்துகள்  இன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக ஏற்கனவே புகையிரத திணைக்களம் அறிவித்திருந்தது.எனினும் இன்று ஒரு சில தொடருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வைத்தியசாலைகளில் நடவடிக்கைகள் இடம்பெற்றன.இந்நிலையில் நண்பகல் 12 மணி தொடக்கம் 2 மணிவரை வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் வீதியில் இறங்கி சுலோகங்களை ஏந்தியவாறு அரசுக்கு எதிரான தமது எதிர்ப்பினை  வெளிப்படுத்தி இருந்தனர்.

IMG20220506112350 இரண்டாவது நாளாகவும்  இலங்கை முடங்கியது                          

இதனிடையே இலங்கையின் மலையகப் பகுதிகளில் சில தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனியினரின் நிர்ப்பந்தம் காரணமாக பணியில் ஈடுபட்டிருந்ததாக அறியக்கூடியதாக உள்ளது.இந்நிலை தவறு என்று கண்டித்துள்ள அரசியல் அவதானிகள், அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறியுள்ளனர்.

IMG20220506105020 இரண்டாவது நாளாகவும்  இலங்கை முடங்கியது                          

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக இன்னும் வலுவுடன் இடம்பெறும் சாத்தியக்கூறுகளே அதிகமாக மேலெழுந்து வரும் நிலையில் ராஜபக்ஷாக்களின் முன்னெடுப்புக்கள் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

இதனிடையே ராஜபக்ஷாக்கள் பதவியில் இருந்தும் விலகாவிடின் எதிர்வரும் 11 ம் திகதி புதன்கிழமை முதல்  முது அடைப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படுமென்று தொழிற்சங்கங்கள்  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.