வேலைப் பயிற்சி மையத்தை நிறுவ மலேசியாவுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

மலேசியாவுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்

மலேசியாவில் வேலைவாய்ப்பினை இலக்காகக் கொண்டு ஒரு விசேட பயிற்சி மையத்தை விரைவாக நிறுவுவது தொடர்பில் மலேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை தொழிலாளர் அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளன.

தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இலங்கை, மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய் ஆகியோருக்கு இடையில் அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு அமைச்சர் நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக இருந்த போது இரு நாடுகளுக்கும் இடையில் மலேசியப் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் மற்றும் உயர்ஸ்தானிகர் உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்து உரிய காலத்தில் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கொவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் மலேசியா புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதன் கதவுகளைத் திறந்தவுடன் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறு அமைச்சர் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக உற்பத்தித் துறை வேலைகளுக்கு அதிகளவிலான தொழிலாளர்களை அனுப்புவது குறித்தும், அவர்கள் தொடங்கவிருக்கும் மலேசியப் பயிற்சி மையம் மூலம் விசேட பயிற்சிகளை வழங்குவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

மலேசிய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறைந்த பட்ச சம்பளத்தை உள்ளடக்க முடியும் என மலேசிய உயர்ஸ்தானிகர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

Tamil News