இலங்கை: பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் – ரணில் விக்ரமசிங்க

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழி வகை செய்யத் தயார் என அறிவித்துள்ளார்.

கொழும்பில் மக்கள் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் ரணில். அதில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட சில பிரதான கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. நீடித்து வரும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் ரணிலும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தமது அழைப்புக்கு இணங்கி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் பேசிய ரணில், பிரதமர் பதவியில் இருந்து விலகத் தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்வதாகவும் ரணில் கூறியுள்ளார்.