இலங்கை ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுகிறார்

127 Views

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்றிரவு நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது பதவியை விட்டு வெளியேற வேண்டுமெனக்கோரி தொடர்ச்சியாக இளைஞர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதனடிப்படையில் காலிமுகத்திடல் இளைஞர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் இன்றுடன் மூன்று மாதத்தை எட்டியிருந்தது. இதேவேளை இன்றும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றதோடு கொழும்பில் பிரதான போராட்டம் இடம்பெற்றது. வர்த்தகர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், கலைஞர்கள், விரிவுரையாளர்கள், சர்வ மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். அத்தோடு நாட்டின் பல பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இன்றைய உக்கிர போராட்டத்தின் எதிரொலியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை தான் பிரதமர் பதவியில் இருந்து விலகி இடைக்கால அரசாங்கத்துக்கு வழிவிடுவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவும் எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகச் போவதாக சபாநாயகர் ஊடாக இப்போது அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகுவதாக  வெளியான தகவலையடுத்து மக்கள் வெடிகொழுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று இரவு 7 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்னால் பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு உள்ளான ” சிரச” தொலைக்காட்சியின் நான்கு ஊடகவியலாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து சிலர் பிரதமரின் இல்லத்துக்கு தீ வைத்துக் கொளுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரணில் விக்ரமசிங்கே ஆறாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட போதே, ​​இலங்கையில் அது பெரும் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது.காரணம், ராஜபக்ச குடும்பத்துக்கு ரணில் விக்ரமசிங்க நெருக்கமானவராக அறியப்படுபவர். அவர் பிரதமராக இருப்பதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தாரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்கலாம் என்று நம்பப்பட்டது. இலங்கை பிரதமராக ஆறு முறை இருந்தாலும் தமது பதவிக்காலத்தை ஒரு முறை கூட ரணில் முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply