இலங்கை:மாதவிடாய் கால நாப்கின்களின் சடுதியான விலையேற்றம்- மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்களை இலவசமாக வழங்க கோரிக்கை

263 Views

மாதவிடாய் கால நாப்கின்களின் சடுதியான விலையேற்றம் காரணமாக பாடசாலை மாணவியர்களும் பெண் ஆசிரியர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

 இந்நிலையில் பாடசாலைகளில் பெண் மாணவர்களுக்கு மாதவிடாய் நாப்கின்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும் எனவும்  கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாதவிடாய் நாப்கின் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் ஐந்து பிரதான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு வரிச்சலுகையை வழங்குவதற்கும் – அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்துக்கு அமைய – உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்கள், பத்து எண்ணிக்கை அடங்கிய ஒரு பாக்கெட்டின் விலை 50 தொடக்கம் 60 ரூபாய் வரை குறைவடையும் என்றும், அதற்கமைய அதன் அதிகபட்ச சில்லறை விலை 260 தொடக்கம் 270 ரூபாயாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் முடிவுப்பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகளும் 18% அல்லது 19% குறைவடையும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மாதவிடாய் நாப்கின்களுக்கு பூஜ்ஜிய சதவீத வாட் வரி விதிக்கப்படும் என்றும் மாதவிடாய் நாப்கின்களை முடிவுப்பொருட்களாக இறக்குமதி செய்பவர்களுக்கும் பூஜ்ஜிய சதவீத வாட் வரியின் அனுகூலம் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 51.6 வீதமானோர் பெண்கள். இவர்களில் 10 வயது முதல் 50 வயது வரையிலானோர் மாதவிடாய் கால நாப்கின்களின் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்      பொருளாதார நெருக்கடி காரணமாக சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச இறக்குமதித் தீர்வை மற்றும் உள்நாட்டு வரிகள் காரணமாக சானிட்டரி நாப்கின்களுக்கான விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அந்த வகையில் தற்போது 42 சதவீதமான வரிகள் – மாதவிடாய் நாப்கின்கள் மீது விதிக்கப்பட்டுள்ளதென்றும் பாராளுமன்றில் உரையாற்றிய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- பிபிசி தமிழ்

Leave a Reply