இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோட்டா அரசுக்கு எச்சரிக்கை – அகற்றப்பட்டன காவல்துறை வாகனங்கள்

கோட்டா அரசுக்கு எச்சரிக்கை

கோட்டா அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை அடக்கும் வகையில் காலிமுகத்திடலில் காவல்துறை வாகனங்கள் குவிக்கப்பட்டதை அடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோட்டா அரசுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றுவரும் காலிமுகத்திடலுக்கு அருகில் ஏராளமான காவல்துறை வானங்கள் குவிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு திடீரென காவல்துறை வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்ததால் காலிமுகத்திடல் பகுதியில் இன்று காலை பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தது.
போராட்டக்காரர்களை இந்தப் பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றும் முயற்சியாக காவல்துறையினர் இங்கு களமிறக்கப்படுகின்றனரா? என இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டனர்.
இதற்கிடையே ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டதரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை சட்டதரணிகள் சங்கம், இந்த நாட்டு மக்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நிலைமையை மேலும் மோசமாக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இவ்வாறான முயற்சியானது நாட்டின் ஜனநாயக உரிமையை கேள்விக் குட்படுத்துவதுடன், சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்புக்குட்படுத்தும். அத்துடன், பொருளாதாரத்திலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரததில் இன்று காலை குவிக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் அங்கிருந்து சற்று முன்னதாக அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply