அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு படகில் செல்ல முற்பட்ட 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
இயந்திர படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரும் தற்பொழுது அம்பாறை பாணமை காவல்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவுஸ்ரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். இதன்போது, அதில் இருந்த 38 பேரையும், வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.