உளவு பலூன் விவகாரம்- அமெரிக்கா – சீனா இடையே மோதல் அதிகரிப்பு

தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீன ‘உளவு’ பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்து வருவதைக் கண்டோம். நிச்சயம் அது ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நாங்கள் நம்புகிறோம். மக்களின் பாதுகாப்புக்காக அந்த பலுனை நாங்கள் சுடவில்லை. பலுனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ” என்று தெரிவித்தார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிவிப்பில், “இம்மாதிரியான பலூன்கள் கடந்த காலங்களிலும் காணப்பட்டன. ஆனால் அவற்றைப் பற்றிய தகவல்களை சேகரிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளது.

”உளவு பலுன், டிக் – டாக், என நமது தேசிய பாதுகாப்பிற்கான ஆபத்தான சூழல் உருவாகியுள்ளதை கண்டு கவலை கொள்கிறேன்” என மோண்டானா கவர்னர் கிரெக் ஜியான்போர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த உளவு பலூன் விவகாரத்தால் தற்போது அமெரிக்கா – சீனா இடையே மேலும் மோதலை அதிகரித்துள்ளது. ஆனால் இதுகுறித்து சீன தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அமெரிக்காவை விடவும் வலுவான பொருளாதாரமாக வளரும் சாத்தியங்களுடன் சீனா இருந்து வருகிறது. உலக நாடுகளின் சூப்பர் பவராக நினைத்துக்கொள்ளும் அமெரிக்கா அதற்குப் போட்டியாக வளரும் சீனாவின் வளர்ச்சியை விரும்பவில்லை. மேலும் சீனா – அமெரிக்கா இடையே சர்வதேச அரங்கில் வர்த்தக போட்டி வலுவாக மாறி உள்ளது. இதன் எதிரொலிதான் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா அவ்வப்போது எடுத்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.