தமிழ் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில சக்திகள் முயற்சி ; சம்பந்தன் குற்றச்சாட்டு

ஒற்றுமையை சிதைப்பதற்கு சில சக்திகள் முயற்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக, இந்த விடயங்கள் தொடர்பில், சம்பந்தப் பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து, கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்க சுமந்திரன் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய பின்னர் சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களை வகிக்கும் அங்கத்தவர்கள் பொதுவாக வடக்கு, கிழக்கு மாகாண மாவட்டங்களில் வசிக்கின்றார்கள். கொரோனா வைரஸின் தாக்கத்தால் தனியாகவும் குழுக்களாகவும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்குத் தடையாக அமைந்துள்ளது. இதன் விளைவாக சில விடயங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமை உருவாகியுள்ளது.

தேசிய பிரச்னைக்கான அரசியல் தீர்வை அரசமைப்பினூடாகப் பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிகப் பிரதானமான குறிக்கோளாகும்.

இந்த நாட்டில் தமது பூர்வீகத்தைக் கொண்டுள்ள மக்களின் இறையாண்மையானது முழு நாட்டிலும் அவர்களுக்கான ஆட்சி அதிகாரம், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்கும் அவர்களின் வரலாற்று ரீதியான பூர்வீகம் மற்றும் இலங்கை அரசும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும், இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் பிரமாணங்களின் அடிப்படையிலும் அமையப் பெற்றதாகும்.

இந்த அடிப்படை விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

ஏனைய சில விடயங்கள் தொடர்பில் ஒருங்கிணைத்த கூட்டங்கள் இடம் பெறாமையானது சில தெளிவற்ற நிலைமைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாகக் கூறப்படுகின்றது. இந்த முக்கிய தருணத்தில் ஒற்றுமையைப் பேணுவது அடிப்படையானதாகும். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்; மாறாக அவர்களைக் குழப்பக்கூடாது.

ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் சமத்துவம், நீதி மற்றும் சுயகௌரவம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டும் எமது குறிக்கோளில் உறுதியாகப் பயணிப்பதற்குத் தெளிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.”

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021