‘கொரோனா பரவலை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை’: ஐ.நா.

”கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது ” எனக் குறிப்பிட்ட ஐ.நா.,வின், 75வது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர், (Volkan Bozkir)  “உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே,  கொரோனாவிற்குத் தீர்வு காண முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு பொதுக் கூட்டம் துவங்கியது. இதில், முக கவசத்துடன் வந்த, உறுப்பு நாடுகளின் துாதர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தமது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், இக்கூட்டத்தில் உரையாற்றிய  வோல்கன் போஸ்கிர்,  “ஐ.நா.,வின், 75வது ஆண்டு திட்டங்கள் அனைத்தும், கடந்த ஆறு மாதங்களில், கொரோனா பரவலால் மாறிவிட்டன. எத்தகைய அச்சுறுத்தலில் நாம் உள்ளோம் என்பதை, முக கவசங்கள் உணர்த்துகின்றன. இதில் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்துகின்றன.

எனினும், சில நாடுகள், பன்னாட்டு அமைப்புகளை துாற்றுவதும், உலக நாடுகள் எதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேள்வி கேட்பதையும், நாம் பார்க்கிறோம். இத்தகைய சர்ச்சைகள் எழ காரணங்கள் உண்டு. ஆனால், அவை மூலம் தவறான முடிவுகள் எடுக்கப்படுவது சரியல்ல என்பது தான் என் கருத்து. எந்த நாடும் தனியாகவே அல்லது சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமாகவோ, கொரோனாவை ஒழித்து விட முடியாது. தனித்து செயல்படுவது, கொரோனா பரவலை அதிகரிக்கவே உதவும்.

தற்போதைய சூழலில், அனைத்து நாடுகள் மற்றும் அமைப்புகள் மீது, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு  நமக்கு உள்ளது. உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.கொரோனா பிரச்னையில் நாம் என்ன தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து, எதிர்காலத்தில் அத்தகைய நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில்,ஐ.நா.,வை அழிக்க முடியாது பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. அதனால், அமெரிக்க அதிபராக, டிரம்ப் மீண்டும் தேர்வானால், ஐ.நா., அமைப்பு நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, ஐ.நா., 75வது ஆண்டு பொதுச் சபை கூட்டத் தலைவர், வோல்கன் போஸ்கிரிடம், செய்தியாளர்கள் கேட்ட போது,  ” ஐ.நா.,வின் பின்னால் பல நாடுகள் உள்ளன. ஒரு தனி நபரோ அல்லது ஒரு நாடோ, ஐ.நா.,வை அழிக்க முடியாது. அது இன்னும், 75 ஆண்டுகள் சேவை புரியும்” என்று   வோல்கன் போஸ்கிர் மேலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.