தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம்- அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்

117 Views

தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம்

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் அரசின் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (15) காலை மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில்……

தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா,

“தமிழர்களுடைய பெரும்பான்மை இனப்பிரதிநிதித்துவம், இனப்பரம்பல் சீர்குலைக்கப்பட்டு அவர்களுடைய இன அடையாளம் அழிக்கப்படும் நடவடிக்கை இப்போதைய காலப்பகுதியில் தீவிரமாக முன் எடுக்கப்படுகிறது.

தமிழ் மக்களுடைய தேசம், கலாசாரம், மதம் எல்லாமே பௌத்த சிங்கள மயமாக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ் மக்களை அழிக்கின்ற தமிழ் தேசத்தை அழித்து விடுகின்ற நடவடிக்கையை இந்த ஆட்சி செய்து வருகிறது. அதனை விட தமிழ் பிரதேசங்களோடு அயலில் இருக்கின்ற சிங்கள கிராமங்களை இணைப்பதன் மூலம் தமிழர்களுடைய பெரும்பான்மையை அழித்து சீர்குலைத்து தமிழ் இனம் என்கிற அந்த பதத்தை அல்லது இனப்பரம்பலையே இல்லாமல் செய்கிற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. கோட்டாபய ஆட்சியில் தமிழர்களுடைய தேசம் சிங்கள மயமாக்கப்பட்டு, பௌத்த தேசமாக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டியதுடன், தமிழின அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம்.“

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,

“சிங்கள அரசானது சட்டத்திற்கு முரணாக சுற்று நிரூபத்திற்கு முரணாக சிங்கள கிராமங்களை தமிழர்களது தாயகத்துடன் இணைப்பது தமிழர் கிராமங்களை சிங்கள கிராமங்களுடன் இணைப்பது போன்ற பல்வேறு முரண்பாடான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் தமிழர்களது போராட்டங்களையோ, உணர்வுகளையோ இந்த அரசு மதிக்கவில்லை . இந்த கார்த்திகை மாதத்தில் கார்த்திகை மலர்கள் மலர்கின்ற இந்த வேளையிலே யாழப்பாணத்தில் ஜே.வி.பி தங்களது போராளிகளில் இறந்தவர்களை நினைவுகூர முடியும் என்றால் ஏன் தமிழர்கள் தங்களது தேசத்திலே தங்களது போராளிகளை உறவுகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்பதை இந்த அரசு எடுத்து கூறவேண்டும்.”

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை  முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன்,

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் பிரதேச செயலகத்துடன் அனுராதபுரத்திலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு அரசாங்க அதிபர் முன்மொழிவை ஒன்றினை எல்லை நிர்ணயக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளார்.

அரசாங்கம் இந்த மாவட்டத்தின் எல்லையின் ஒரு இஞ்சியைக் கூட்டுவதாக இருந்தாலும் சரி, குறைப்பதாக இருந்தாலும் சரி இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் கருத்துக்கள் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் எதையும் அறியாமல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக எல்லை நிர்ணயக்குழுவிற்கு அனுராதபுரத்திலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான ஒரு முன்மொழிவு அரசாங்க அதிபரினால் எல்லை நிர்ணயக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம்- அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்

Leave a Reply