இலங்கையில்நடைபெறும் ஆட்சி மாற்றப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பங்களிக்க வேண்டுமா? | இளந்தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்

141 Views

தென்னிலங்கையில்  நடைபெற்று வரும் மக்கள் போராட்டம்,  ஒரு குறிப்பிடத்தகக்க வெற்றியை அடைந்துள்ள நிலையில்,  இது தொடர்பாக     இளந்தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி…

கொழும்பை மையமாக வைத்து நடைபெறும் அதிகாரமாற்றத்தினால் ஈழ மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக தமிழக மக்கள் எவ்வாறு உதவலாம் என்று நினைக்கின்றீர்கள்?

பதில்:- ஈழத்தமிழர்களை தன்னுடைய கைப்பாவையாக கையாள நினைக்கும் இந்திய அரசின் கரங்களை கட்டுப்படுத்துவதுதான் தமிழகத்தின் கடமையாகும்.

இந்திய அரசு பலவந்தமாக ஈழத்தமிழ்த்  தலைமைகளைத் தங்களுடைய செல்வாக்கிற்குள் வைத்துக் கொண்டு அவர்களைத் தான் சொல்வதைக் கேட்கும்படியும் தங்கள் கட்டளைகளைக்கு அடிபணியக் கூடியவர்களாகவும் நடத்தி கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் ஈழத்தமிழ் மக்களுடைய வரலாற்று ரீதியான கோரிக்கைகள் மற்றும் உடனடிக் கோரிக்கைகளை முன்வைத்து அதைப் பேச வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இருக்கிறது.

குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் தமிழகம் உறுதியாக நிற்க வேண்டும். இவை திம்புப் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளாகும்.

இனவழிப்புக்குப் பன்னாட்டுப் புலனாய்வைக் கோரியும் அரசியல் தீர்வுக்குப் பொதுவாக்கெடுப்பைக் கோரியும் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் உறுதியாக நின்று இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

இலங்கையில் நடக்கக்கூடிய அரசியல் மாற்றங்களின் மீது செயல் ஊக்கம் மிக்க ஒரு தலையீட்டை தமிழ்நாடு செய்ய முடியும். கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்னையில் நாங்கள் நடத்திய ஈழத் தமிழரின் விடியலுக்கான மாநாட்டில்,  ”கோத்தபய வீட்டுக்குப் போ” என்ற முழக்கத்துடன் ‘சிறிலங்காவில் நடந்துவரும் போராட்டம் வெற்றி பெற வேண்டும். அதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

அதற்குச் செயல்வடிவம் தந்து கோத்தபய பதவி விலக வேண்டும் என்று முன்வைத்து ஒரு போராட்டத்தைக்கூட தமிழ்நாட்டில் அடையாள பூர்வமாக நடத்தியிருக்க முடியும். தமிழ்நாடு அரசும் கூட இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க முடியும். சிங்கள மக்களுடைய போராட்டம் நியாயமானது என்றும் இராசபக்சேக்கள் மீது பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசுடைய நிலைப்பாடு என்று அறிவித்திருக்க முடியும். அதையெல்லாம் நாம் செய்யத் தவறிவிட்டோம்.

கூடுதலாக ஈழத்தமிழ் மக்கள், ஈழத்தமிழ் தலைமைகள் ஒரு செயல் ஊக்கத்துடன் போராடி தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி கொண்டிருந்தால்தான் தமிழ்நாட்டில் நடைமுறைரீதியாக அதை பிரதிபலிக்க முடியும். அங்கு ஒரு செயலின்மை இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் எதை பிரதிபலிப்பதென்ற ஒரு குழப்பம் இருக்கும்.

எந்தளவிற்கு ஈழத்தமிழ் மக்களிடையே போராட்டங்கள் வெளிப்படுகிறதோ அந்தளவிற்கு தமிழ்நாட்டில் அதற்கு ஆதரவை திரட்ட முடியும்.

இன்று தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்ட அதிகார மாற்றம் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையில் எந்தளவுக்கு உதவும் என எண்ணுகிறீர்கள்?

விடை:-   உண்மையில் ஆட்சி மாற்றம் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. சிங்கள ஆளும் வகுப்பிடம் தலைமை இல்லாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

சிங்கள அரசியலில் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் செல்வாக்கு செலுத்தி வந்த சிங்கள ஆளும் வகுப்பை சேர்ந்த சேனநாயகா குடும்பமும் பண்டாரநாயக்கா குடும்பமும் இராசபக்சே குடும்பமும் செல்வாக்கை முற்றாக இழந்துள்ளன. அந்த குடும்பங்களில் இருந்து ஒரு தலைமை எழுந்துவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரராசபக்சக்கள் போரின் வெற்றி நாயகர்களாக இருந்த போதும், அந்த வெற்றியில் மக்கள் கொண்டிருந்த மதிப்பை தங்கள் குடும்ப அரசியல் காரணமாகவும்,  ஊழல் காரணமாகவும் இழந்துவிட்டார்கள்.

சிங்கள ஆளும் வகுப்பிடம் இருக்கக்கூடிய இந்த அரசியல் வெற்றிடத்தை தமிழர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். எதிரி குழம்பிப் போய் இருக்கும் பொழுது தமிழர்கள் தங்களுடைய அரசியல் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் ”கோத்தபய வீட்டுக்கு போ” என்ற போராட்டத்தில் ஈழத்தமிழர்கள் ஊக்கமுடன் பங்கேற்கவில்லை.

தாங்கள் ராசபக்சேக்களுக்கு வாக்களிக்கவில்லை, 69 இலட்சம் சிங்களர்களே வாக்களித்தார்கள், போராட்டம் அவர்கள் பாடு என்றும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் இராசபக்சேக்கள் அதை இனவாதமாக மடைமாற்றிவிடுவார்கள் என்றும் சொல்லி தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்காதது தான் சரி என்று பேசப்படுகிறது.

இராசபக்சேக்களைப் பதவியில் இருந்து இறக்குவதும் அவர்கள் செய்த பன்னாட்டுக் குற்றங்களுக்காகக் கூண்டிலேற்று, சிறையிலடை என்பதும் ஒன்றுக்கு ஒன்று முரணான கோரிக்கைகள் அல்ல. இனவாதத்தை நோக்கி மடைமாற்ற வேண்டும் என்றால் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே செய்திருக்க வேண்டும். சிங்கள வெகுமக்கள் போராடத் தொடங்கிய பின், தெருவில் இறங்கியபின் அதை மடைமாற்றுவது அத்தனை எளிதல்ல. எனவே, தமிழர்கள் போராடாமல் இருந்தததற்கு சொல்லப்படும் காரணங்கள் இரண்டும் பொருத்தமுடையதல்ல.

2009க்கும் முன்பு சிங்கள அரசுடன் நேர்க்கோட்டில் இருந்த சிங்கள வெகுமக்கள் இப்போது முரண்பட்டு நிற்கின்றனர். கோத்தபயாவிற்கு வாக்களித்தவர்கள்தான் இப்போது அவரை விரட்டியடித்துள்ளனர்.

இந்த நேரத்தில் தமிழர்கள் தங்களுடைய கோரிக்கையை எழுப்பியிருந்தால் அதைச் சிங்கள மக்கள் செவி கொடுத்து கேட்டிருப்பார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, பெரும் பொருட்செலவுடன் வடக்குகிழக்கு தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை வெளியேற்று உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பியிருக்க வேண்டும். பொருளியல் நெருக்கடிக்கு காரணம் பெரும் படைச்செலவு என்று சிங்கள வெகுமக்களுக்கு விளக்கியிருக்க முடியும். மொத்தத்தில் இந்த நான்கு மாத கால போராட்டக் காலத்தை தமிழர்கள் தவற விட்டதாகவே தெரிகின்றது. போராடியிருந்தால் தமிழர்கள் தமக்கான போராட்ட வெளியை விரிவடையச் செய்திருக்க முடியும். போராடும் சிங்களர்களுக்கு எதிராக துப்பாக்கியைப் பயன்படுத்தாத இராணுவம் அந்த துப்பாக்கியைத் தமிழர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தியிருக்க முடியாது.

யாரும் முன்கணித்திடாத அரசியல் சூழல் இது. சிங்களவர்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த வெற்றிடத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும், எத்தகைய கோரிக்கைகளை மேசையில் வைக்கமுடியும் என்று தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களின் போராட்ட அழுத்தம் தான் தமிழ்த் தலைமைகளை நெறிப்படுத்த முடியும். அனைத்துக் கட்சி அரசு அமையும் பட்சத்தில் நிதியைக் கையாளும் அதிகாரம் கொண்ட மாகாணசபை என்பது வரை தமிழர்கள் கோர முடியும். தமிழ்த்தலைமைகள் இந்தச் சூழலை வெறும் அமைச்சர் பதவியைப் பெறுவதோடு சுருக்கிவிடாமல் சில கோரிக்கைகளையாவது வென்றெடுக்கும் தருணமாக மாற்றவேண்டிய கடமை தமிழ்மக்களுக்கு உண்டு.

இப்பொழுது போராட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் ஜேவிபியும் சரி அதில் இருந்து பிரிந்து வந்த சோசலிச முன்னணியும் சரி தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு, இனவழிப்புக்கான நீதி ஆகியவற்றை  ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆனால் நாம் இந்த கோரிக்கைகளை முன்வைத்து  அவர்களை  நிர்ப்பந்தித்து சிலவற்றையேனும் ஏற்றுக் கொள்ள செய்ய முடியும்.   அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ வெளியேற்றம், காணாமலாக்கப்பட்டோருக்கான புலனாய்வு, வடக்குகிழக்கு இணைப்பு, நிதி அதிகாரம் கொண்ட மாகாண சபை ஆகிய கோரிக்கைகளை எழுப்ப வேண்டும்.

இந்த விடயங்களில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

விடை:- போராட்டத்தின் ஏற்ற இறக்கங்களை, வளர்ச்சிப் போக்கை தீர்மானிக்கக்கூடியது. இலங்கையிலுள்ள அரசியல் நிலவரம் தான் குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களுடைய போராட்டம் தான். அந்த வகையில் தாயகத்தில் வாழக்கூடிய ஈழத்தமிழ் மக்களுடைய கோரிக்கைகளைப் பிரதிபலிக்கக்கூடியவர்களாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தாயகத்தில் உள்ளவர்களை வழிநடத்தகூடிய அல்லது இந்தக் கோரிக்கைகளை முன்னெடுங்கள்’ என்ற ஒரு சில முன்வைப்புகளை வைக்கக்கூடிய நிலைமையைப் பார்க்கிறோம். காலிமுகத்திடல் போராட்டத்தில் தமிழர்கள் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதுகூட புலத்தில் இருந்து தொடர்ச்சியாக பேசப்பட்ட கருத்தாக இருந்தது. ஆனால்  இலங்கை தீவிற்குள் இருக்கக்கூடிய வாய்ப்புகள், சாத்தியப்பாடுகள் ஆகியவற்றைப் புலத்தில் இருப்பவர்களைவிட அதிகமாக அங்கு இருக்கக்கூடிய மக்கள் தான் புரிந்து  கொள்ள முடியும்.

புலம்பெயர் தமிழர்கள் வாழக்கூடிய அந்தந்த நாட்டினுடைய அரசிடம் மேற்சொன்ன உடனடி கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். சிறிலங்காவிற்கு உதவி செய்யும் பொழுது இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் தர வேண்டும் என்று அந்தந்த அரசுகளுக்கு வலியுறுத்த வேண்டும்.

Leave a Reply