கிழக்கில் அழிந்துசெல்லும் மரபுகள் – இருப்பின் ஆபத்திற்கான அறிகுறிகள் | மட்டு.நகரான்

96 Views

இலங்கையின் இன்று பாரிய குழப்ப நிலைகள் காணப்படுகின்றன. சிங்கள தேசம் இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றது. தமிழர்கள் எதிர்கொண்ட பாரியளவிலான கஸ்டங்களில் ஒரு துளியே இன்று சிங்கள தேசம் எதிர்கொண்டுவருகின்றது.

இந்த கஸ்டங்கள் என்பது தமிழர்களுக்கு பழகிப்போன விடயமாக நோக்கினாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழர் தாயகப்பகுதியைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இன்று சிங்கள தேசத்தில் எழுந்துள்ள நெருக்கடிகள் நாளை தமிழர் தேசத்தினை நோக்கி வருவதற்கான ஆபத்துகள் இருக்கின்றன. எனவே இவ்வாறான நிலையில் தமிழர் தேசத்தினைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் தமிழர் தாயப்பகுதியில் ஆயுத மோதல்கள் ஏற்படப்போவதில்லை. மாறாக வேறு வகையான செயற்பாடுகளை தமிழர் தாயகப்பகுதிகளில் முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

கலைகலாச்சார ரீதியான அத்துமீறல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் தமிழர்கள் தமது கலைகலாச்சாரம் மற்றும் காணிகள் என்பவற்றைப் பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணம் கலைகலாச்சார ரீதியில் பாரிய ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது. கிழக்குத் தொல்பொருள் செயலணி ஒன்று கொண்டுவரப்பட்டதே இவ்வாறான கலாச்சார பாரம்பரியங்களை இல்லாமற் செய்வதற்காகவே.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கலைகலாசார பண்பாட்டு விழுமியங்கள் மாற்றப்பட்டு வேறு ஒரு கலாச்சாரத்தினையும் பண்பாட்டினையும் மக்கள் நாடிச்செல்லும் நிலை காணப்படுகின்றது.

இலங்கையில் ஆதிக்குடிகளான நாகர்கள் வாழ்ந்த பூமியாகவும் தமிழர்களின் பூர்வீகமான வழிபாட்டு முறைகளும் மாற்றமடைந்து, இன்று வேறு ஓரு திசை நோக்கிச்செல்லும் நிலையில் அந்த மாற்றங்கள் என்பது தமிழர்களின் இருப்புக்கு பாரிய ஆபத்தானதாக அமைவதற்கான சான்றுகள் உள்ளன.

இங்கு தமிழர்களின் கடந்த கால போராட்டங்கள் மற்றும் எழுச்சிகள் மதம் கடந்தவையாகயிருந்த காரணத்தினால் தமிழர்களின் வரலாறுகளிலும் கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களை ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லையென்பது கவலைக்குரியதாகவேயிருக்கின்றது.
இந்தக் கட்டுரையினை இங்கு நான் எழுதுவது மதம் சார்ந்து சிந்தித்தோ அல்லது ஒரு மதத்தினை முதன்மைப்படுத்தியோ அல்ல. ஆனால் கிழக்கில் தமிழர்களின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்ததாக ஆலயங்களும் அதன் வரலாறுகளும் அதனுடன் இணைந்த கலைகலாச்சார பண்பாடுகளும் காணப்படுகின்றன என்பதை நினைவூட்டுவதற்காக.

கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமானது இன்று கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குட்படுத்தும் நிலைமையினை ஏற்படுத்துவதற்கான ஏதுவான காரணிகளாக அமையப்போகின்றது என்பதே உண்மையாகும்.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இலங்கையில் ஆதி மக்களாக தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் உள்ளமை குறித்து முன்னைய கட்டுரைகளில் நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த சான்றுகள் எவையும் பாதுகாக்கப்படவில்லையென்ற தகவல்களையும் அதில் குறிப்பிட்டிருந்தேன். இதேபோன்று தமிழர்களின் பாரம்பரிய கலைகலாச்சாரங்கள் இந்திய மோகத்திற்குள் மூழ்கி,  தூர விலகிச்செல்லும் நிலைமையானது கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது.

கிழக்கு மாகாணத்திற்கென தனியான வழிபாட்டு முறைகள் பாரம்பரியமாகக் காணப்படுகின்றன. இந்தமுறையானது ஏனைய இடங்களில் உள்ள தமிழர்களின் வழிபாட்டு முறைக்கு மாறானதாகவும் கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான வழிபாட்டுமுறைகளாகவும் காணப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவந்த வழிபாடுகள் என்பது ஆதி தமிழர்களின் வழிபாடாகவே கருதப்படுகின்றது. பத்ததி வழிபாட்டு முறையில் சடங்கியல் முறைகளுடன் முன்னெடுக்கப்பட்ட வழிபாடு என்பது இயற்கையுடன் இணைந்த தமிழர்களின் தனித்துவமான வழிபாடாகயிருந்துவந்தது.

குறிப்பாக நாகர்கள் இந்த வழிபாடுகளை முன்னெடுத்துவந்துள்ளனர். பத்ததி  வழிபாடுகள் அம்மன் திருச்சடங்குகளாக சிவன்வழிபாடுகளாக, முருக வழிபாடுகளாக, நாக வழிபாடுகளாக இடம்பெற்றுவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழிபாடுகளே இன்றும் கிழக்கின் தனித்துவம் தொடர்பில்பேசும் நிலையிலிருந்துவருகின்றன. கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சான்றுகள் அழிவடைந்தபோதிலும் மக்களுடன் இணைந்த வழிபாட்டு முறைகள் தமிழர்களின் பாரம்பரியத்தினை முன்கொண்டுசென்றன.

கிழக்கில் அந்நியர் படையெடுப்பு காலத்தில் சிவன் ஆலயங்கள் அழிக்கப்பட்டபோது, தமிழர்களின் வரலாறுகள் பலவும் அழிக்கப்பட்டன. அக்காலப்பகுதியில் சிவ ஆலயங்கள் தேடித்தேடி அழிக்கப்பட்டபோது, சில வரலாற்றுச்சிறப்புமிக்க ஆலயங்கள் பிள்ளையார் ஆலயங்களாக மாற்றப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இவ்வாறான நிலையில் தமிழர்களின் வழிபாட்டு வரலாறுகள் மறைந்துபோயின.
மண்முனை, கோவில்குளத்திலிருந்த மிகப்பெரும் சிவாலயம் தகர்க்கப்பட்டு, அது மண்ணுக்குள் புதைக்கப்பட்டது. இதன் எச்சங்கள் இன்று வெளிக்கிளம்பி வருகின்றன.  ஆனால் அதன் வரலாற்று ரீதியான சான்றுகள் இதுவரையில் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை.

அத்துடன் பல தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று வாழ்வியலுடன்  பத்ததி சடங்குகளை முன்னெடுத்த ஆலயங்கள் அந்த பழைமையிலிருந்து மாறிவருவது எதிர்காலத்தில் கிழக்கின் தமிழர்களுக்கான ஆபத்தான விடயமாகவே கருதப்படமுடியும்.

இன்று சடங்கு முறைகளான ஆலயங்களும் கிழக்குத் தமிழர்களின் பாரம்பரியமான சடங்கு முறைகளும் ஆகம விதிகளுக்கு மாறிவருவதானது கிழக்கில் தமிழர்களின் அடையாளத்தினை இழக்கும் நிலைமையினைத் தோற்றுவிக்கும். அதேவேளை பௌத்த மதவாதம் தனது போலி வரலாற்றினைப் புகுத்தி தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்ய அல்லது தனது பௌத்த தேரவாதத்தினை நிலைநாட்டுவதற்கு சாதக நிலையினை ஏற்படுத்தும் என்பது இன்று அனைவரது கருத்தாகவுமுள்ளது.

ஆகம விதிகளுடனான பூசைமுறையென்பது இந்த நாட்டிற்கு வந்த வரலாறு என்பது மிகவும் சொற்பமானதாகவே காணப்படுகின்றது. இதனைக்கொண்டு தமிழர்களின் வரலாற்றினை அடையாளப்படுத்தி பௌத்த வரலாற்றினை நீண்ட வரலாறாக காட்டும் கைங்கரியங்கள் கிழக்கில் முன்னெடுப்பதற்கான சூழ்நிலையினையும் யாரும் மறுக்கமுடியாது.

செங்கலடி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட குசனார்மலையில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முருகன் ஆலயத்தினையே இன்று பௌத்த விகாரையென உரிமைகோர முற்படும் சிங்கள தேசத்திற்கு தமது பாரம்பரிய அடையாளங்களை தொலைத்துநிற்கும் பகுதிகளை உரிமைகோருவதற்கு நீண்ட நாட்கள் தேவையில்லை. ஆனால் இன்றும் தமிழர்களால் குசனார்மலைப்பகுதி புறக்கணிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.

அங்குள்ள வரலாற்றினைப் பாதுகாப்பதற்கோ அதனைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதற்கோ எந்த செயற்பாடுகளும் இதுவரையில் யாராலும் முன்னெடுக்கப்படவில்லை.

இதேபோன்று மட்டக்களப்பில் வெல்லாவெளிப் பிரதேசத்தில் அமைந்த  ஆயிரம் கால் ஆலமரம் கி.மு. 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். நாகர் காலத்தினைச் சேர்ந்த இது இற்றைக்கு 2100 ஆண்டுகளுக்கு  முன்னர் வெல்லாவெளி பிரதேசத்தில் தமிழ் மொழி பேசிய மக்கள் வாழ்ந்ததற்கு இங்கு உள்ள “குடைவரைக் கல்வெட்டு” சான்றாகவுள்ளது.

ஆதிப் பழங்குடி மக்களான நாகர் இன மக்களே இங்கு வழிபாடுகளை நடத்தினர் என்பதற்கு இங்கு உள்ள ஆதிகால நாக வழிபாடு சான்று பகிர்கிறது. இன்றும் அதி சக்தி வாய்ந்த மிக பழைய வைரவர் ஆலயம் இங்குள்ளது.

ஆனால் இவை தொடர்பான ஆவணப்படுத்தல்கள் எதுவும் இல்லை. காலப்போக்கில் இவை அழிந்து இப்பகுதியில் பௌத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று பிக்குகள் வந்து விகாரையினை அமைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் வரையில் இதனை பாதுகாக்கவும் ஆவணப்படுத்தவும் யாரும் முன்வரமாட்டார்கள்.

கிழக்கின் தனித்துவமான ஆலயங்களும் அதன் வழிபாட்டு முறைகளும் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான முன்னாயத்தச்  செயற்பாடுகளை தமிழ் பரப்பில் செயற்படுவோர் முன்னெடுக்கவேண்டும். கிழக்கில் தொல்பொருள் ஆவணக் காப்பகம் அமைக்கப்பட்டு பண்பாடுகளும் வரலாறுகளும் ஆவணப்படுத்தப்படவேண்டும். அத்துடன் தொல்லியல் சார்ந்த எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு கிழக்கின் வரலாறுகள் ஆழமான ஆய்வுகள் செய்யப்பட்டு எழுதப்பட்டு நூலுருவாக்கப்படவேண்டும்.

இவை இன்று மிகவும் அவசியமாகவும்  அவசரமாகவுமுள்ள செயற்பாடுகளாகும். இவற்றினைச் செய்யவேண்டிய பொறுப்பு கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் உள்ளது.

Leave a Reply