அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு- சுகாதார அமைச்சு

312 Views

அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்து, தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்நிய செலாவணி பிரச்சினையால் உரிய முறையில் கடன் பத்திரங்களை திறந்துகொள்ள முடியாமை, மருந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடனுதவியின் கீழ் கடன் பத்திரங்களை திறந்து, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், நிதியுதவி அல்லது மருந்துகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி அல்லது உதவித் தொகையை பெறுவதற்காக சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லையென உத்தியோகபூர்வ மூலமொன்றை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply