சீரற்ற காலநிலை தீவிரம்: 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டமே வெள்ளம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 1113 குடும்பங்களைச் சேர்ந்த 3475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 40 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1310 பேர் 8 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1264 நபர்கள் 6 பாதுகாப்பு முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிக்கிறது. அடுத்த 36 மணித்தியாலங்களில் (நேற்று வியாழக்கிழமை காலை 6 மணி முதல்) இந்த அமைப்பானது இலங்கையை விட்டு நகர்ந்து, படிப்படியாக பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, பசறை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், காலியில் தவலம, எல்பிட்டிய, நியகம மற்றும் நெலுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், களுத்துறையில் இங்கிரிய, புளத்சிங்கள, அகலவத்த, பதுரலிய, மத்துகம, ஹொரன மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், கண்டியில் பூஜாப்பிட்டிய, தும்பனை, தெல்தோட்டை, தொலுவ, உடுநுவர, ஹதரலியத்த, ஹரிஸ்பத்துவ, பஸ்பாகே கோரள, ஹட்டிநுவர, உடபலாத்த, பஹதஹேவாஹெட்ட, பன்வில, கங்கா இஹல கோரள, கங்காவத்த கோரள மற்றும் அக்குரணை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கேகாலையில் புளத்கொஹூபிட்டிய, மாவனல்ல, கேகாலை, அரநாயக்க, ஹட்டியாந்தோட்டை, வரகாப்பொல மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், குருணாகலில் ரிதீகம பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தளையில் இரத்தோட்டை, நாவுல மற்றும் அம்பன்கங்ககோரள பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தறையில் பிட்டபெத்தர பிரதேச செயலகப்பிரிவுக்கும், மொனராகலையில் வெல்லவாய மற்றும் படல்கும்புர பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், நுவரெலியாவில் நோர்வூட், அம்பகமுவ மற்றும் கொத்மலை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரியில் எஹெலியகொட, கலவான, குருவிட்ட, கொடகவெல, கிரிஎல்ல மற்றும் அயகம பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வான் கதவுகள் திறப்பு

இராஜாங்கனை, நாச்சியாதுவ, அம்பேவல, லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில, ஹோட வாவி, வெஹெரகல, அம்பகொல வாவி, உஸ்கல சியம்லன்கமுவ, மாகல்ல, தேவஹூவ, நாலந்தா, வேமடில்ல, தெதுரு ஓயா, அலிகொட ஆர, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக்கள் பாதிப்பு

மாத்தளை மாவட்டத்தில் தித்வா சூறாவளியால் சேதமடைந்த ரிவஸ்டன் பகுதி வீதி தற்போது இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு மாத்திரம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டியிலிருந்து தலாத்துஓயா செல்லும் வீதியின் உட தெல்தோட்ட பாலம் தாழிறங்கியுள்ளமையால் அவ்வீதி மூடப்பட்டுள்ளது. மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இராணுவத்தின் கண்டி மாவட்டப் பிரிவு ஒருங்கிணைந்து அங்கு பாலம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாற்று வழியாக, கலகா நகரிலிருந்து பேரவத்த வீதி ஊடாக அம்பலமான – பெல்வுட் சந்தி வீதியைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத போக்குவரத்து பாதிப்பு

மன்னார் ரயில் பாதையில் மன்னார் முதல் மதவாச்சி வரை ரயில் போக்குவரத்து இடம்பெறவில்லை. மலையக ரயில் பாதையில் ரம்புக்கனை முதல் அம்பேவெல வரை ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அம்பேவெலவிலிருந்து பதுளை வரை மாத்திரமே ரயில்கள் இயக்கப்படுகின்றன.