நேற்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற பயணிகள் தொடருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதனை சிறைப் பிடித்துள்ளனர்.
தொடருந்து ஓட்டுநர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 450க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கியுள்ள நிலையில் முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகள் உட்பட சில பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தது 214 பேரை பிரிவினைவாதக் குழு பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறது. பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்க உலங்குவனூர்திகள் மற்றும் சிறப்புப் படைகளுடன் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிவினைவாதக் குழுவைச் சேர்ந்த 27 பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள், மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியாக மணிக்கணக்கில் நடந்து சென்று பாதுகாப்பான இடத்தை அடைந்ததாக கூறியுள்ளனர். பாகிஸ்தானில் குறைந்த மக்கள் தொகையும், அதிக கனிம வளம் நிறைந்த மாகாணமான பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் தேவை என்ற முழக்கத்துடன் பி.எல்.ஏ பிரிவினைவாத அமைப்பு இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.